உன்னதத்தின் ஆறுதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 21

அமைதியும் சுகமும் தரும் தேவன்.

சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிராத்திப்போம்.
உன்அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன்அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.சங்கீதம் 122:7.

மானிட உலகில் வாழ்க்கைப் பாதையானது எப்போதும் அவரவருக்கு நியாயமானதாக தோன்றும். ஆனால் நினையாத நேரத்தில் கால் தடுமாறி விழுந்துவிட நேரிடும் போதுதான் எமது பாதை பிழையானது என்று எண்ணத் தொடங்குகிறோம். சரியான பாதையிலும் இடர்கள் வரத்தான் செய்யும். எனினும் அங்கே ஒரு நம்பிக்கை நம்மைத் தைரியப்படுத்தும். அந்த நம்பிக்கைதான் என்ன? அது நாம் தேவனிடத்தில் வைக்கும் நம்பிக்கையே அந்த நம்பிக்கை. நாம் தேவனை நோக்கிப் பார்த்தோமானால் சறுக்கி விழுந்தாலும் நிச்சயம் எழுந்து நிற்போம்.

இன்றைய இந்த சிந்தனையை முழுமையாக விளங்கிக்கொள்ள சங்கீதம் 25தை வாசிப்போம். (வேதப்புத்தகம் உள்ளவர்கள் வாசிக்கவும்). இந்த சங்கீதத்தில் தாவீது முதலாவதாக, கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும், உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும் என்று வச.4 இலும், கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார், ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார் என்று வச.8 இலும், கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார் என்று வச.12 இலும் காணக்கூடியதாக உள்ளது

ஆம், தேவன்தாமே, தம்முடைய வழிகளை பாவிகளாகிய நமக்கு தெரியப்படுத்துகின்றார். கர்த்தருக்குப் பயந்து அவருடைய வழிகளைத் தெரிந்து கொண்டு அதிலே நடக்கும்போது, தேவன் தாம் தெரிந்து கொள்ளும் வழிகளை நமக்கு காட்டுவார். தேவனுடைய வழிகளில் நடக்க நமது சுயபெலத்தால் மாத்திரம் முடியாது. அதற்கு தேவபெலம் அவசியம். அந்த தேவபெலன், வழிநடத்தல் நம்மை தாங்குமானால், அது மானிடராகிய நமது வாழ்விற்கு ஆசீர்வாதம் அல்லவா. இந்த உண்மையை அறிந்த தாவீது எப்போதும் தேவனுடைய சந்நிதியை நாடினதுமில்லாமல் உமது வழியை எனக்கு தெரிவித்து உமது பாதையை எனக்கு போதித்து என்னை நடத்தும் என்று கேட்டுக்கொண்டான்.

பிரியமான மக்களே, இன்று நீ பயத்திலும், துக்கத்திலும், திகிலிலும், கலக்கத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பாய் என்றால் தயங்காதே. உன்னை சகல இக்கட்டுக்களிலும் இருந்து விடுவித்து ஆறுதல்தர உனக்கு ஒரு தெய்வம் உண்டென்பதை மறவாதே.

உனக்கு தேவன் பேரில் விசுவாசத்தை பயிற்றுவிற்கும் தேவன் உன் அருகில் இருக்கிறார் என்ற உணர்வு முதலில் உனக்கு இருக்க வேண்டும். அப்போது நீ பயமின்றி இளைப்பாறுவாய் (வாழ்வாய்-இருப்பாய்). தேவன் சில சூழ்நிலைகளை அனுமதிக்கக்கூடும். இதை ஒரு பயிற்சியாக என்று எண்ணி முன்னேறிச்செல். கோணலான வழிகளை செவ்வைப்படுத்தி, தேவனிடத்தில் இருந்து உனது அலங்கத்திற்குள்ளும் (உனக்கும், உனது குடும்பத்திற்குள்ளும்), உன் அரண்மனை களுக்குள்ளும் (நீ வசிக்கும் வீட்டிலும் அதனைச்சூழவுள்ள பகுதிகளிலும்) சுகத்தைப் (ஆறுதலை, அமைதியை, பயமற்ற சூழ்நிலையை….) பெற்றுக்கொள்.

வேதம் சொல்கிறது யோபு 9:10 இல், ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் (தேவன்) செய்கிறார் என்று.

ஆகவே உனது வாழ்க்கையில் உள்ள அனைத்து கோணலான வழிகளையும், வேதனைகள், துயரங்கள், பயங்கள் அனைத்தையும் தேவனிடத்தில் ஒப்புவித்து, கர்த்தாவே உமது வழியையும், உமது பாதையையும், உமக்குப் பயப்படும் பயத்தையும் எனக்குத்தந்து எனது வாழ்வில் அமைதியையும், உமது சமாதானத்தையும் அடைந்து கொள்ள உதவி செய்யும் என்று மன்றாடு.

அவர் உனது மன்றாட்டைக்கேட்டு, உனக்கு சமாதானத்தை அருளுவார். அப்போழுது உனது வாழ்வில் ஓர் அதிசயத்தைக் காண்பாய். அந்த அதிசயமும் இந்த 122ம் சங்கீதத்தில் எழுதப்பட்டுள்ளது. கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். எருசலேமே (பரிசுத்த இடமே), உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.

எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் (விண்ணப்பிப்பதற்கு) போகும். அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள் (தேவனைத்தேடும் மக்களின் ஆறுதலுக்காக ஜெபிக்கப்படும்).

உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக (நீதிமான்கள் வனமாக இருப் பார்களாக). உன்அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன்அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. என்சகோதரர் நிமித்தமும் என்சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன். எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.

அன்பின் பிதாவே, நான் உம்மை அறியாது இருந்த போதும், நீர் எனக்கு உமது வார்த்தையில் உள்ள அமைதியை, இளைப்பாறுதலை, விடுதலையை எனக்கு தெரியப்படுத்துகிறீரே, அதற்கு என் நன்றிகள். உமது பாதைகளை அறிந்து உமது வழியைக்கைக்கொண்டு, உமக்குப் பயந்து நடக்க எனக்கு உதவி செய்யும் பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark

Related posts