யாழ். மாவட்டத்தை முடக்கும் தீர்மானம் அரசுக்கு இல்லை

தற்போதைய நிலையில் யாழ். மாவட்டத்தை முடக்கும் தீர்மானம் இல்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில் நேற்றைய தினம் (27) செவ்வாய்க்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தினை முடக்குவதற்கான தீர்மானம் இல்லை. அரசாங்கம் ஏனைய மாவட்டங்களில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தி இருக்கின்றது.

ஆனால் அந்த ஒரு நிலைமை யாழ் மாவட்டத்திற்கு இன்னும் ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்படும் போது நிச்சயமாக முடக்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படலாம்.

அதற்காக தற்போதைய நிலையில் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. ஏனென்றால் கடந்த வாரம் மக்கள் சற்று பீதியடைந்த நிலையில் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது.

பொது மக்கள் ஒன்றுகூடல்களை தவிர்த்து பாதுகாப்பாக நடந்து கொண்டால், இவ்வாறான அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ளலாம். ஆகவே அசௌகரியங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான பொறுப்பு மக்களிடம் இருக்கின்றது. எனவே தற்போதைய நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டை முடக்கும் தீர்மானம் இல்லை. எழு மாற்றான பிசிஆர் பரிசோதனைகளின் பிரகாரம் திங்கட்கிழமை 13பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது. அந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பிறகு 1,201பேருக்கு யாழ்.மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 708நபர்கள் பூரண சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று வரை 19கொரோனா மரணங்கள் யாழ்.மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. நேற்று வரை ஆயிரத்து 253குடும்பங்களைச் சேர்ந்த 3416நபர்களை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தி இருக்கின்றோம்.

15.23மில்லியன் ரூபாய்க்கு உதவி ஜனவரி மாதத்திற்கு பின்னர் சுமார் 1,523சுயதனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் உணவுப் பொதிகளை வழங்கியுள்ளோம்.

அதனடிப்படையில் 15 .23மில்லியன் ரூபா இன்று வரை இந்த வருடம் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 491குடும்பங்களுக்கான நிதிக்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த நிதி கிடைத்தவுடன் அவர்களுக்கும் அந்தநிதி பகிர்ந்தளிக்கப்படும்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள்

தற்போது அரசினுடைய புதிய சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள், அரச, தனியார் நிறுவனங்கள் அனைவரும் பின்பற்றி செயற்பட வேண்டும்.

அதேபோல், வழிபாட்டு இடங்களில் 50பேருக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் யாழ்ப்பாண மாவட்டத்திலே வழிபாட்டு இடங்களில் இந்த நடைமுறையினை பொதுமக்கள் அனுசரித்துச் செல்லவில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த அலட்சியத்தை விடுத்து சுகாதார நடை முறைகளை அலட்சியம் செய்யாது செயற்படவேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆலயங்களில் 50பேருக்கு மேற்பட்ட ஒன்றுகூடல்களை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த விடயங்களை ஆலய பரிபாலன சபை மற்றும் ஆலய நிர்வாகத்தினர் கண்காணித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழிபாட்டு இடங்களில் இறுக்கமான நடைமுறையினை பின்பற்றப்பட வேண்டியது அவசியமெனவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

Related posts