நடிகர் விவேக் மறைவு ; இன்று மாலை உடல் தகனம்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்றார்.
உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார்.

59 வயதாகும் விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகளையும் பரப்பினார். இதனால் அவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டினார்.

மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.

மருத்துவமனையிலிருந்து அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் விவேக்கின் மறைவையறிந்து அவரது இல்லத்தின் முன்பு ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இரங்கல் செய்தியில்

சமூக நலனை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர் நடிகர் விவேக், சுற்றுச்சூழல், மரம்வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் என தெரிவித்துள்ளார்.

துணை முதல் அமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பியவர் நடிகர் விவேக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர், நடிகர் விவேக் என கூறி உள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்

சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர்.

தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ !. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் திரையுலகினர் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.

நடிகர் விவேக் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்

தமிழ் திரையுலகில் நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவர் என்று தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் நடிகர் விவேக் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கே பேரிழப்பு என கூறி உள்ளார்.

பகுத்தறிவு கருத்துக்களை பரப்பி வந்த சின்ன கலைவாணர் விவேக் மரணம் வேதனை தருகிறது என்று சுப.வீரபாண்டியன் தெரிவித்து புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்

தனது நகைச்சுவையால் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்றவர். பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுவைத்து இயற்கை வளங்களை பாதுகாத்தவர் விவேக் என்று கூறி உள்ளார்.

தான் பிறந்த மண் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர் நடிகர் விவேக் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறி உள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்

பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அதைத் திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர், நடிகர் விவேக் நடிப்பை தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தியவர் என கூறி உள்ளார்.

நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தலைவர் தொல். திருமாவளவன் கூறி உள்ளார்.

சமூக அக்கறையோடு பணியாற்றி நமது நெஞ்சங்களில் ‘நாயகனாக’ உயர்ந்தவர் விவேக் என ரவிக்குமார், எம்.பி கூறி உள்ளார்.

சமூக விழிப்புணர்வோடு பணியாற்றிய மகத்தான கலைஞர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என வைகைச்செல்வன் கூறி உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சின்னக்கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.

சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள், விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் விவேக்கின் இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என டைரக்டர் அட்லி கூறி உள்ளார்.

சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக்என நடிகர் ராஜேஷ் கூறி உள்ளார்.

சமூக செய்தியை தனது நகைச்சுவை நடிப்பு மூலம் இணைத்த சமகால சிறந்த நடிகர் விவேக் என இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறி உள்ளார்.

நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்லாது, சமூகத்திற்கே பேரிழப்பு என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பதிவில்,

“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க் கதாநாயகன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்திக் ஆகியோர் சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் மயில் சாமி, மனோபாலா, ஆடுகளம் நரேன் ஆகியோர் சாலிகிராமத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

திரைப்படத்தில் நடிப்பதைத் தாண்டி சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் நடிகர் விவேக் என்று நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்கின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக நடிகை கோவை சரளா இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் மறைந்துவிட்டார் என்பதை இன்னமும் நம்பமுடியவில்லை என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் இரங்கல்

அற்புதமான மனிதர், நல்ல மனிதர், தர்ம சிந்தனை உள்ளவர் நடிகர் விவேக் என்று நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.

எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார், திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் என டைரக்டர் சேரன் கூறி உள்ளார்.

சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக்கின் பிரிவு, வார்த்தைகளில் சொல்ல முடியாத துயர் என டைரக்டர் பார்த்திபன் கூறி உள்ளார்.

Related posts