வாக்களிக்கவில்லையா? – சமுத்திரக்கனி விளக்கம்

வாக்களிக்கவில்லை என்று வெளியான செய்திக்கு சமுத்திரக்கனி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 6) சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு முடிந்தது. ரஜினி, கமல், விஜய், அஜித் தொடங்கி பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தார்கள்.
பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாக்களித்துவிட்டு, கையில் மையுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்கள். இந்தத் தேர்தலில் வாக்களிக்காத பிரபலங்கள் பட்டியலைப் பலரும் வெளியிட்டார்கள். அதில் சமுத்திரக்கனியின் பெயரும் இடம்பெற்றது.
இது தொடர்பாக சமுத்திரக்கனி வீடியோ வடிவில் விளக்கமொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“நான் வாக்களிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காலை 6:55 மணிக்கு நடந்தே சென்று நானும் என் மனைவியும் வாக்கைச் செலுத்தினோம். முதலில் வாக்களிக்கும் மெஷின் வேலை செய்யவில்லை. அதைச் சரி செய்ய 40 நிமிடங்கள் ஆனது. அதற்குப் பிறகு 7:40 மணியளவில் முதல் வாக்காகப் பதிவிட்டேன். பின்பு படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டேன்.
நான் வாக்களித்துவிட்டேன் என்று விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் நான் வாக்களிக்கவில்லை என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் வாக்களித்து என் கடமையைச் சரியாகச் செய்துவிட்டேன்”.
இவ்வாறு சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

Related posts