செல்ஃபி எடுத்த ரசிகர்கள்: அஜித் கண்டிப்பு

வாக்களிக்க நின்று கொண்டிருக்கும் போது செல்ஃபி எடுக்கவந்த ரசிகர்களை அஜித் கண்டித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
கரோனா தொற்று அதிகரித்து வருவதால் வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
சென்னையில் திரையுலக பிரபலங்கள் வாக்களிக்க வரும் நேரம் உள்ளிட்டவை பத்திரிகையாளர்களுக்குப் பகிரப்பட்டது. ஆனால், அஜித் வரும் நேரம் மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டது. ரசிகர்கள் குழுமிவிடுவார்கள் என்பதே காரணம் என்று அவருடைய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காலை 6:30 மணியளவிலேயே சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்துவிட்டார் அஜித். முதல் நபராக வந்துவிட்டதால், அந்த வாக்குச்சாவடியில் 7 மணிக்கு முன்னதாக வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு முதல் நபராக அவர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அஜித் வாக்களிக்க வந்தபோது, அவருக்கு அருகில் காவல்துறையினர் வர சற்று தாமதமானது. அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்கக் கூடினார்கள். அஜித் அவர்களை கோபமாக முறைக்கவே ரசிகர்கள் சிலர் திரும்பிச் சென்றார்கள். அப்போது இன்னொருபுறம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க மொபைல் போனுடன் அவர் அருகில் வந்தார். அப்போது அவருடைய போனை பறித்துவிட்டார் அஜித்.
பின்பு அவருக்கு அருகில் காவல்துறையினர் மற்றும் அஜித்துடன் வந்தார்கள். உடனடியாக அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். ரசிகர்களைப் பார்த்து அனைவரும் வெளியேறும்படி சைகை செய்தார். அதற்குப் பிறகு வாக்களித்துவிட்டுச் சென்றார் அஜித்.அஜித் வாக்களித்துவிட்டு வெளியே வந்து, அடையாள மை பூசப்பட்ட தனது விரலை உயர்த்திக் காட்டினார். பின்னர் அவர் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டார். திருவான்மியூர் வாக்குச்சாவடியில் அஜித் வந்து சென்ற சில நிமிடங்களுக்குப் பரபரப்பு ஏற்பட்டது. அவர் சென்ற பின்னர் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

Related posts