வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம்

தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு ’பூத் சிலிப்’ வழங்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் தலைவர் விகே சசிகலா பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் இல்ல முகவரியில் சசிகலாவுக்கு வாக்குரிமை இருந்துவந்தது. ஆனால், போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதால் வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னை தி.நகர் இல்லத்தில் உள்ள முகவரியில் வசித்துவரும் சசிகலா அந்த முகவரியில் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயரை இணைக்க விண்ணப்பிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்துள்ள சசிகலா அரசியலில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

—–

ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அதிமுக புகார்!

நவீன முறையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்க்கோரி தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்து உள்ளது. கொளத்தூர், திருவண்ணாமலை, சேப்பாக்கம் ,காட்பாடி, திருச்சி மேற்கு ஆகிய 5 தொகுதிகளில் திமுக நவீன முறையில் பணப்பட்டுவாடா செய்து உள்ளது. எனவே ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அதிமுக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

—–

ஊத்தங்கரையில் அதிமுக பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய திடீர் ஆய்வில் 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை (ஏப்ரல் 6) நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு வினியோகத்தை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனையின் போது உரிய ஆவணமின்றி வாகனங்களில் எடுத்துச்செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அதேபோல், பணப்பட்டுவாடா புகார்களில் பல்வேறு அரசியல் கட்சியினர் வீடுகளில் சோதனைகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஊத்தங்கரையில் உள்ள அதிமுக பிரமுகர் ராமு வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதிமுக பிரமுகர் வீட்டில் 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிமுக பிரமுகர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஊத்தங்கரை தேர்தல் அலுவலர் சேது ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

—–

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்படும் நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. காவல்துறை பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. இதனுடன் விவிபேட் இயந்திரங்களும் கொண்டுச் செல்லப்பட உள்ளன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளைக் காலை தொடங்க உள்ளது. தமிழகத்தில் தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, மநீம, அமமுக தலைமையில் நான்கு கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிடுகின்றன. இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும், 10,830 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடக்கும். இந்நிலையில் நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இதுவரை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம் எனும் மையத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
கடந்த வாரம் முழுவதும் வேட்பாளர்கள் பெயர் சின்னங்கள் பொறிக்கும் பணி நடந்து முடிந்தது. பின்னர் அவைகள் தொகுதி, பாக வாரியாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் இன்று அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,20,807 விவிபாட் இயந்திரங்கள் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரம்) ஆகியவை தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு பணிக்கு 300 துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்தத் தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18, 28,727 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்க உள்ளனர்.
வாக்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் இன்று மாலைக்குள் 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் அனுப்பப்பட்டு விடும். நாளை காலைக்குள் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related posts