ரியூப்தமிழ் இப்போது கிடைத்துள்ள அவசர செய்தி..

இன்று அதிகாலை எமது ரியூப்தமிழ் பணிப்பாளர் திருமதி டிவனியா அவர்களும் தமிழ் கொடி பணிப்பாளர் விமல்ராஜ் அவர்களும் கைது செய்யப்பட்டது தெரிந்ததே. இவர்கள் கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாத தடைகளுக்கான படைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

அதேவேளை இவர்களுடைய கைதுக்கான காரணத்தை விளக்கும் பற்றுச்சீட்டுக்கள் யாழ்ப்பாணம் சி.ஐ.ஐ.டியினால் சற்று முன் எமக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் இந்த நாட்டில் பெயர் உச்சரிக்கப்படவே தடை செய்யப்பட்ட முக்கியமான ஒருவருடைய பெயரை உச்சரித்துள்ளார்கள் என்பது கைதுக்கான முதல் குற்றச்சாட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 05.30 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள எமது காரியாலயம் சுற்றி வளைக்கப்பட்டு எமது இலங்கை நிர்வாகி டிவனியா அவர்கள் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் கைதான வேளை தமிழ் கொடி பணிப்பாளர் திரு. விமல்ராஜ் அவர்கள் அவருடைய வீடும் சுற்றி வளைப்பிற்குள்ளாகி அதே நேரமே அவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் ஏற்கனவே ஒரு தடவை கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர் இவர் மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. இருவரும் ஒரே நேரத்தில் வேறு வேறு இடங்களில் கைதானது நன்கு திட்டமிட்டு நடைபெற்ற கைதுகளாகவே இருக்கிறது. அத்தோடு காரியாலய உடமைகள், விபரங்கள், கணினிகள் யாவும் எடுத்து செல்லப்பட்டுள்ளன.

தற்போது இருவர் மீதும் சி.ஐ.டியினரின் விசாரணைகள் நடத்தப்பட்டுக்கொண்டிருப்பதால் மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. சிறீலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் கவுண்சில் நிறைவேற்றிய தீர்மானத்தின் பின்னதாக இந்த பாரதூரமான சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ரியூப் தமிழ் டென்மார்க்கை தலைமையகமாக கொண்ட நிறுவனமாகும். டென்மார்க் நாடும் மனித உரிமைகள் கவுண்சிலில் சிறீலங்காவிற்கு எதிராக வாக்களித்த நாடு என்பது கவனிக்கத்தக்கது.

ரியூப் தமிழ் முற்று முழுதாக சட்டப்படி ஜனநாயக மரபுகளின் வழியே செயற்படும் ஒரு நிறுவனமாக இருந்தும் இந்த நிலையை சந்தித்திருப்பது கவலை தரும் விடயமாகும். இந்த சம்பவம் குறித்து உலக நாடுகளில் இருந்து பலரும் எம்மை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார்கள். விசாரணைகள் குறித்த மேலதிக தகவல் கிடைத்ததும் இடைவிடாது அறியத்தரப்படும். இவர்களுடைய கைதால் உலகம் முழுவதும் உள்ள ரியூப் தமிழ் நேயர்கள் கவலைகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அனைவரும் மனதை கைவிடாது இருக்கும்படி ரியூப் தமிழ் நிர்வாகம் பணிவுடன் கூறியுள்ளது.

அலைகள் 29.03.2021

Related posts