தமிழக சட்ட சபை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நிறைவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நிறைவு பெற்றது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. 13-ந்தேதி (சனிக்கிழமை), 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் தவிர்த்து, வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் அளிக்கும் வேட்புமனு விண்ணப்பம், சொத்துப்பட்டியல் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதுவரை 4,544 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வேட்புமனுக்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் நிராகரிக்கப்படும். இப்பணிகள் முடிவடைந்தவுடன், தேர்தலில் போட்டியிட தகுதியுடைய வேட்பாளர்கள் பெயர் வரிசைப்படுத்தப்படும்.

வேட்புமனு ஏற்கப்பட்டு, கடைசிநேரத்தில் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று எண்ணும் வேட்பாளர்கள் தங்களது மனுவை வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 3 மணிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. எனவே இந்த கால அவகாசம் முடிவடைந்தவுடன், அன்றைய தினம் மாலையிலேயே அந்தந்த தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பெயர் பட்டியல் தயார் செய்யப்படும்.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியும் அன்றைய தினமே நடைபெறும். அதன்பின்னர் மின்னணு வாக்கு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி முழுவீச்சில் தொடங்கி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts