ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக 32 பேருக்கு குற்றப்பத்திரிகை

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக 32 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மனித கொலை, சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் 8 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பான 8 அறிக்கைகளும் சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த தாக்குதல் தொடர்பான பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்ட 241 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கும் வரையில் சட்டமா அதிபர் காத்திருந்தார். தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்தநிலையில் சட்டமா அதிபரால் 12 சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

——

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டியவர்களே தற்போது கூச்சலிடுகின்றார்கள் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீது 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. எதிர்க் கட்சியால் இது தொடர்பில் 3நாட்கள் விவாதம் கோரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதற்கு தயாராகவுள்ளது. எவ்வாறிருப்பினும் பொறுப்பு கூற வேண்டியவர்களே தற்போது கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு கூச்சலிட்டுக் கொண்டிருப்பவர்கள் தாம் அறிந்தவற்றை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கூறியிருக்கலாம். அவ்வாறின்றி தேவையற்ற கருத்துக்களை கூறிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது. எவ்வாறிருப்பினும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் நடவடிக்கையை தொடர்ந்து முறையாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

2015 ஆம் ஆண்டு முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறும் வரை இடம்பெற்ற பல சம்பவங்கள் தொடர்பில் அழுத்தங்களின் காரணமாக பொலிசாரினால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாவனெல்ல சம்பவம் இடம்பெற்ற போதே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றிருக்காது என்றார்.

Related posts