‘த்ரிஷ்யம் 3’ கதைக்காகக் குவிந்த மெயில்கள்..

‘த்ரிஷ்யம் 3’ கதைக்காகக் குவிந்த மெயில்கள் தொடர்பாக ஜீத்து ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியான ‘த்ரிஷ்யம் 2’ படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து ‘த்ரிஷ்யம் 3’ தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஜீத்து ஜோசப் இ-மெயில் முகவரிக்கு ‘த்ரிஷ்யம் 3’ கதை தொடர்பாக தொடர்ச்சியாக இ-மெயில்கள் குவிந்து வந்துள்ளது. இதுதொடர்பாக ஜீத்து ஜோசப் தனது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
“நான் ‘த்ரிஷ்யம் 3’ படத்துக்கான கதையைத் தேடி வருவதாக சில நாட்களாக சமூக ஊடகங்களில் எனது மின்னஞ்சலுடன் ஒரு புரளி உலவி வருகிறது. ஆனால் இது பொய்யான செய்தி. மற்றவர்களிடமிருந்து கதைக்கான யோசனை கேட்கும் எண்ணம் எனக்கு இல்லை.
மற்ற கதைகளைப் பற்றி விவாதிக்கவும், நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அணுகவும் அந்த மின்னஞ்சலை நான் பயன்படுத்துகிறேன். ஒரு வானொலிப் பேட்டியில் அந்த முகவரியைச் சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது என்ன பிரச்சினை என்றால் எனது மின்னஞ்சல் பெட்டி நிறைந்துவிட்டது.
புதிய மின்னஞ்சல்கள் வர இடமில்லை. எனவே த்ரிஷ்யம் 3க்கான கதை எதையும் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்போதைக்கு 3ஆம் பாகம் பற்றிய எண்ணம் இல்லை. அப்படி வரும் மின்னஞ்சல்களை, படிக்காமலேயே நீக்கிவிடுவேன்”
இவ்வாறு ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒரு பேட்டியில், தன்னிடம் ‘த்ரிஷ்யம் 3’-க்கான முடிவு உள்ளதாக ஜீது ஜோசப் கூறியிருந்தார்.

Related posts