‘பாகுபலி 2’ சாதனையை முறியடித்துள்ளது ‘மாஸ்டர்’ வசூல்.

தமிழகத்தில் ‘மாஸ்டர்’ படத்தின் வசூல் பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’.
சேவியர் பிரிட்டோ தயாரித்த இந்தப் படத்தை லலித் குமார் வெளியிட்டார். சுமார் ஒரு வருடம் காத்திருப்புக்குப் பிறகு, பொங்கல் விடுமுறைக்கு இந்தப் படம் வெளியானது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலுமே இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. இதுவரை தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை ‘பாகுபலி 2’ நிகழ்த்தி இருந்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்துள்ளது ‘மாஸ்டர்’ வசூல்.
இது தொடர்பாக முன்னணி விநியோகஸ்தர் ஒருவரிடம் விசாரித்த போது, “சரியான வசூல் தொகை எவ்வளவு என்பது ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட்ட லலித்குமாருக்குத் தான் தெரியும். ஆனால், ‘பாகுபலி 2’ படத்தின் வசூல் சாதனையை ‘மாஸ்டர்’ படத்தின் வசூல் முறியடித்து முதல் இடத்தைப் பிடித்துவிட்டது என்பது உண்மை தான்” எனத் தெரிவித்தார்.
இந்த மாபெரும் சாதனையால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் 5 இடத்தில் விஜய் படங்கள் தான் இருக்கிறது. ‘மாஸ்டர்’, ‘பாகுபலி 2’, ‘பிகில்’, ‘சர்கார்’ மற்றும் ‘மெர்சல்’ என்ற வரிசையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் படங்கள் தொடர்ச்சியாக செய்து வரும் வசூல் சாதனையால், அவருடைய கால்ஷீட்டை எப்படியாவது வாங்கிவிட முன்னணி தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகின்றன.

Related posts