பொன்னியின் செல்வன் ஹைதராபாத் படப்பிடிப்பு நிறைவு

ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
ரோனா அச்சுறுத்தலுக்குப் பின்பு நடிகர்கள் அனைவரிடம் பேசி ஒட்டுமொத்தமாக சுமார் 45 நாட்கள் படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. இதற்காக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டது. இதில் அனைத்து நடிகர்களையும் வைத்துப் பல முக்கிய காட்சிகளைப் படமாக்கி வந்தார் மணிரத்னம்.
கடும் கட்டுப்பாடுகளுடன் நடிகர்களும் சிரமத்துடனே இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தனர். இன்று (பிப்ரவரி 26) ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. இதனைப் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஏக் லக்கானி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:”பணியாற்றும் அணிகளில் ஒரு அணி, இதோ பெரிய தலைவர் மணி அவர்களுடனேயே புகைப்படம். இந்த அசுரத்தனமான படப்பிடிப்பை முழு மனதுடன் முடிக்கிறோம். ஷப்பா, இந்த கோவிட் சமயத்தில் இதை முடித்திருக்கிறோம் என்பதை நம்ப முடியவில்லை. உங்கள் ஆதரவுக்கு நன்றி பெண்களே. அட்டகாசமாக முடித்தீர்கள். எங்கள் முதுகெலும்பானா சிகேவும், உயிர் மூச்சான யுபியும் இந்தப் புகைப்படத்தில் இல்லை. இனி நல்ல தூக்கம், ஸ்பா, நிறைய ஷாம்பைனுக்கான நேரம்”
இவ்வாறு ஏக் லக்கானி தெரிவித்துள்ளார்.
அனைத்து நடிகர்களும் அவர்களுடைய ஊர்களுக்கு நாளை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்திலிருந்து ஜெய்ப்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அத்துடன் முழுப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கிராபிக்ஸ் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு.2022-ம் ஆண்டின் முதல் பாதியில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல் பாகம் வெளியான 6 மாதத்துக்குள் 2-ம் பாகத்தை வெளியிடவுள்ளனர்.

Related posts