தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது.

புதுடெல்லியில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் அட்டவணையை வெளியிடுகிறார்.

தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடைபெறும், தமிழகத்துக்கு எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்கள் இன்று வெளியாக உள்ளது.

இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், இன்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரவிருக்கிறது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை புது தில்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர், 5 மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் முன்னேற்பாடுகளை குறித்து ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில், கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக முதல்கட்டமாக மேற்குவங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலத்துக்கு துணை ராணுவப் படையினர் அனுப்பட்டுள்ளனர். தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது தொடர்பாக 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவுடன் நடத்திய ஆலோசனையில், தேர்தல் முன்னேற்பாடுகள், பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அச்சமற்ற, நியாயமான சூழலில் 5 மாநிலத்தில் தேர்தலை நடத்த ஆணையம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மேற்குவங்கத்தில் அதிகளவில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளதால், அம்மாநிலத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கும்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில, யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும். அசாமில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடப்பதற்கு வாய்ப்புள்ளது.

5 மாநிலங்களிலும் கொரோனா வழிகாட்டுதல் அடிப்படையில் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையம் அதிருப்தி அடைந்துள்ளது. அதனால், 2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில் மாநில சட்டசபை தேர்தல் ஆறு கட்டங்களாக நடைபெற்றது. ஆனால் தற்போது 7 கட்டங்களாக நடக்கும். மொத்த வாக்குச்சாவடிகளான 30 ஆயிரத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 6,400 ஆக அதிகரித்துள்ளது. பீகாரில் பின்பற்றப்பட்ட கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளின்படி 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

——

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையளித்து வந்தனர். இதையடுத்து அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருவதாக நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 89. சிறுநீரக தொற்று, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் 1932ஆம்ஆண்டு பிறந்தவர் தா. பாண்டியன். இவர் பத்து ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும்வடசென்னையில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts