ஐ.நா மனித உரிமைகள் அறிக்கை முற்றிலும் பக்கச்சார்பானது ?

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை முற்றிலும் பக்கச்சார்பானது என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது என வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பிரபாகரனும் அவரது நண்பர்களும் பிரபாகரனின் மகளுக்கு வைர மோதிரங்களை அணிவித்து மகிழ்ச்சி கண்டபோது, அப்பாவி தமிழ் குழந்தைகளின் கழுத்தில் சயனைட் குப்பிகளை தொங்கவிட்டு சிறுவர் படையினராக மாற்றினர் என்றார்.

கண்டி குண்டசாலை பிரதேச செயலகத்தில் நேற்று ( 25) நடைபெற்ற வைபமொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: அப்பாவி தமிழ் குழந்தைகளுக்கு புத்தகங்களை வழங்குவதற்குப் பதிலாக துப்பாக்கிகளை ஒப்படைப்பதன் மூலம் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவது குறித்து மனித உரிமை ஆணைகுழுவோ அல்லது வேறேதும் அமைப்புகளோ இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இலங்கைக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்டதும் ஆதாரமற்றதுமான முறையில் மனித உரிமைகளுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருவதாகவும், அப்பாவி தமிழர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் மீது பிரபாகரனும் அவரது சகாக்களும் அளித்த அழுத்தம் மனித உரிமை மீறல் இல்லையா? எனவும் அமைச்சர் கேள்வியெழுப்பினார்.

மேலும் போரின் கடைசி நாட்களில் இங்கிலாந்தின் லோட் நெஷ்பி மற்றும் அமெரிக்காவின் ஸ்மித் இருவரும் இலங்கையின் தினசரி அறிக்கைகளிலிருந்து துல்லியமான தகவல்களைப் பெற்றுள்ளனர்.

இதை மனித உரிமை ஆணைக்குழு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிடடார்.

எம்.ஏ.அமீனுல்லா
——

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசாங்கம் விலைக்கு கொள்வனவு செய்துள்ள 05 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் நேற்று இலங்கைக்கு கிடைத்துள்ளன. சுகாதார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளது.

இந்தியாவிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசிகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன் நேற்றைய தினம் சென்னையிலிருந்து இந்திய விமான சேவைக்கு சொந்தமான எயார் இந்தியாவின் ஏ.ஐ.273 இலக்க விமானத்தில் பிற்பகல் 1. 30 மணியளவில் அந்த தடுப்பூசிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள இந்திய விமான சேவை முகாமையாளர் சாராநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தியா அன்பளிப்பாக 05 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியிருந்தது.நேற்றைய தினம் இந்த தடுப்பூசிகளுடன் 14 விமானப் பயணிகளும் மற்றும் பொருட்களும் இலங்கைக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விமானத்தில் தடுப்பூசிகள் குளிரூட்டப்பட்ட களஞ்சியத்தில் வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டு விமான நிலையத்தின் குளிரூட்டப்பட்ட களஞ்சிய தொகுதியில் வைக்கப்பட்ட பின் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கிணங்க ஏற்கனவே இந்தியா 05 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது.அந்த தடுப்பூசிகள் நாடளாவிய ரீதியில் மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 05 இலட்சம் தடுப்பூசிகளைஅரசாங்கம் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

——-

மாலைதீவில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவ்வகையில், குறித்த சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான 972,847 ரூபாவை கடற்றொழில் அமைச்சினால் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சடலங்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொண்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் உயிரிழந்த கடற்றொழிலாளியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்களின் படகு, காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த படகு மாலைதீவு கடலோரப் பாதுகாப்பு படையினரிடம் சிக்கியது. இதன்போது, உயிரிழந்த நிலையில் கடற்றொழிலாளர் ஒருவரின் சடலத்தை மாலைதீவு அதிகாரிகள் மீட்டிருந்தனர். இதனையடுத்து உயிரிழந்தவரின் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கான செலவையும் கடற்றொழில் அமைச்சின் ஊடாக செலுத்துவதற்கு அறிவுறுத்தியமைக்கு அமைய குறித்த நிதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts