தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு ‘ஸ்டிரைக்’?

தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு ஸ்டிரைக் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.
கரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்து திரையரங்குகள் திறந்தவுடன், தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் கடும் பனிப்போர் நடைபெற்று வருகிறது. படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுவது தொடர்பாகத் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துகள் இரு தரப்பிலும் பகிரப்பட்டு வருகின்றன.
30 நாட்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என்ற கடிதம் கொடுத்தால் மட்டுமே, திரையரங்குகள் ஒதுக்குவோம் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் முடிவுடன் இருக்கிறார்கள். இதற்குத் தயாரிப்பாளர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் பிரச்சினை தொடர்பாக முன்னணித் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இருவருக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது தயாரிப்பாளர்கள் வி.பி.எஃப் கட்டணம் கட்ட முடியாது மற்றும் 30 நாட்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிடுவோம் என்ற கடிதம் கொடுக்க இயலாது எனத் தங்களுடைய முடிவுகளைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகத் திரையரங்க உரிமையாளர்கள் தங்களுடைய முடிவைக் கலந்து ஆலோசித்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் தெரிவிக்கவுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையாத பட்சத்தில், மீண்டும் ஒரு ஸ்டிரைக்கை தமிழ் சினிமா சந்திக்கும் எனத் தெரிகிறது. மேலும், வி.பி.எஃப் கட்டணக் குறைப்பு நடைமுறை என்பது மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். அதற்குப் பிறகு மீண்டும் அந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரிகிறது.

Related posts