ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு அழுத்தங்களை..

அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களுக்கு அரசு ஏற்கனவே பதிலளித்துள்ளது

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 46ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று ஆரம்பமானது. இந்த அமர்வு எதிர்வரும் மார்ச் 23ம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் நாளை 24ம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இணையத்தள மூலம் மனித உரிமை பேரவை அமர்வில் உரையாற்றவுள்ளார்.

அது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்: இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள அனைத்து நடவடிக்ைககளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையின் அறிக்கை தொடர்பில் இலங்கை சார்பான பதிலை நாம் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளோம். இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதற்கு நாம் வெற்றிகரமாக முகம் கொடுப்போம்.

இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளோடு இணைந்து நாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பக்கச்சார்பான ஒன்றாகும்.

அவர் இலங்கைக்கு விஜயம் செய்தோ அல்லது பிரதிநிதிகளை அனுப்பியோ தகவல்களைப் பெறவில்லை. 2019ல் இருந்து அரசாங்கம் மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் தவறு என்ற வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள கூற்று தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, சுமந்திரன் தற்போது புலிகளின்ஆதரவு குரலாக செயற்படுகின்றார்.

நாம் விழிப்புடன் செயற்பட்டு எமது தாய்நாட்டை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது மாநாடு நேற்றைய தினம் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் என்டோனியோ குட்டேரஸ், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்லெட் ஆகியோர் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது மாநாடு இணையதளம் மூலமாக இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் தமது நாடுகளின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்களை முன் வைக்க உள்ளனர்.

இம்முறை ஐ. நா. மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மனித உரிமை மேம்பாடு தொடர்பில்ஐ. நா. மனித உரிமை ஆணையாளரினால் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதற்குப் பதிலளிக்கும்வகையில் இலங்கை தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் உரை நிகழ்த்தவுள்ளார்.

ஐக்கிய இராச்சியம், கனடா, மொன்டிநிங்ரோ, மெசிடோனியா. மலாவி உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Related posts