தமிழில் ரீமேக் ஆகிறது தி கிரேட் இந்தியன் கிச்சன்

மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம், தமிழ், தெலுங்கில் ரீமேக்காக உள்ளது.
ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதைச் சொல்லியிருந்த படம் இது.
ஜனவரி 15-ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது.
இந்தப் படத்தின் விமர்சனங்கள் இணையத்தை ஆட்கொண்டன. பலரும் இது தொடர்பாகப் பேசத் தொடங்கினார்கள். தற்போது இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. இதன் உரிமையைக் கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றியுள்ளார் இயக்குநர் கண்ணன்.
நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நாயகியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் எனவும் இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
தற்போது தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘நின்னுக்கோரி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘தள்ளிப் போகாதே’ படத்தை இயக்கி முடித்துள்ளார் கண்ணன். இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

Related posts