‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெளியீட்டுத் திட்டங்கள்

மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெளியீட்டுத் திட்டங்கள் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
தற்போது ஹைதராபாத்தில் முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இதற்காகப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அனைத்து நடிகர்களையும் வைத்து, பல முக்கிய காட்சிகளைப் படமாக்கி வருகிறார் மணிரத்னம். இதன் படப்பிடிப்பு மார்ச் முதல் வாரம் வரை நடைபெறும் எனத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து சிறு ஓய்வுக்குப் பிறகு, ஏப்ரல் மாதத்திலிருந்து ஜெய்ப்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அத்துடன் முழுப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கிராபிக்ஸ் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு.
2022-ம் ஆண்டின் முதல் பாதியில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல் பாகம் வெளியான 6 மாதத்துக்குள் 2-ம் பாகத்தை வெளியிடவுள்ளனர். இந்தப் படத்துக்காக முழுமையாக முடியை வளர்த்து நடிகர்கள் நடித்து வருவதால், இதர படங்களில் நடிக்க முடியாமல் உள்ளனர்.

Related posts