ஜெனீவா இலங்கைக்கு எதிரான யோசனை

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள யோசனைகள் தொடர்பில் உறுப்பு நாடுகளை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

அதற்கிணங்க உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு அது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் சிலரை சந்தித்து அது தொடர்பில் தெளிவுபடுத்தி வருகின்றார்.

இலங்கை அரசாங்கத்துடன் கடந்த காலங்களில் இணைந்து செயற்பட்ட நட்பு நாடுகளிடமிருந்து மேற்படி விடயத்திற்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தினால் கடந்த ஜெனீவா கூட்டத்தொடரில் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் ஏற்கனவே முடிவெடுத்தது.

அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உள்ளக பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதற்கான ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ள நிலையில் அதன் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச். எம்.டி. நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மனித உரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க அதன் அறிக்கையும் காணாமல் போனோர் தொடர்பான பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையும் மேற்படி ஆணைக்குழுவினால் விரிவாக ஆராயப்பட உள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவிடம் இராஜதந்திர ரீதியில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts