தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன் ராகுல்காந்தி

நான் தமிழன் அல்ல, ஆனால் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன் என்று ஈரோடு பிரசாரத்தில் ராகுல்காந்தி கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., வணக்கம் தமிழகம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் ராகுல்காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

நான் எனது மனதின் குரலை பேச வரவில்லை, உங்களின் குரலை கேட்க வந்துள்ளேன். நான் தமிழன் அல்ல, ஆனால் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு தமிழக இளைஞர்களின் பங்கு அளப்பரியது.

தமிழகத்தில் பல மாற்றங்களை கொண்டு வர முடியும். தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் பிணைப்பல்ல, குடும்ப பிணைப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

——

உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி இன்று செயல்பட இருக்கிறார்.

ஹரித்துவார் மாவட்டத்தில், தவுலதாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 19 வயதான மாணவி ஷிருஷ்டி கோஸ்வாமி. அவர் ரூர்கியில் அமைந்துள்ள கல்லூரியில் பி.எஸ்.சி வேளாண்மை பயின்று வருகிறார். தற்போது உத்தரகண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டமன்ற முதலமைச்சராக பணியாற்றி வருகிறார். கோஸ்வாமியின் தந்தை தொழிலதிபராகவும், தாய் இல்லதரசியாகவும் உள்ளனர்.

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி இன்று செயல்பட இருக்கிறார். இன்று ஒருநாள் முதலமைச்சராக பொறுபேற்கும் அவர், அம்மாநிலத்தின் கோடைகால தலைநகரான கெய்சனில் இருந்து மாநிலத்தை நிர்வாகம் செய்ய இருக்கிறார். அரசின் பல்வேறு திட்டங்களை மதிப்பாய்வு செய்யும் அவர், அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுற்றுலாத் துறையின் ஹோம்ஸ்டே திட்டம் உள்ளிட்ட பிற திட்டங்களின் பணிகளையும் மேற்பார்வையிட உள்ளார்.

கோஸ்வாமி பதவியேற்புக்கு முன்பு உத்தரகண்ட் அரசாங்கத்தின் கீழ் உள்ள பல்வேறு துறைகளின் அதிகாரிகள் தங்களின் திட்டம் குறித்து தலா 5 நிமிடம் காணொளி காட்சி மூலம் விளக்கம் அளிக்க உள்ளனர். குழந்தைகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டப் பணிகளில் பங்கேற்று வருவதற்காக கோஸ்வாமிக்கு, ஒருநாள் முதலமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து அம்மாநில அரசாங்கம் கவுரவித்துள்ளது. மேலும், இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் என்பதால், அவர்களை ஊக்குவிக்கவும் மாநில அரசு இத்தகைய முயற்சியை எடுத்துள்ளது.

மாநில முதலமைச்சராக பதவியேற்பது குறித்து மாணவி ஷ்ருஷ்டி கோஸ்வாமி கூறுகையில், “இதனை தன்னால் நம்பவே முடியவில்லை. என்னால் இயன்றதை செய்வேன். மக்களின் நலனுக்காக இளைஞர்களால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் எனது பணி இருக்கும்” என்று கூறினார்.

முன்னதாக தமிழில் வெளியான முதல்வன் படத்தில் அர்ஜூன் ஒருநாள் முதல்வராகவும், இந்தியில் நாயக் திரைப்படத்தில் அனில்கபூர் ஒரு நாள் முதல்வராகவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

—–
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. அந்த வகையில் ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கோவை புலியங்குளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் ஏந்தியது குறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கடவுளை இழிவாக பேசியவர்கள் கையில் இன்று வேல் உள்ளது. ஸ்டாலின் தற்போது வேலை ஏந்திவிட்டதால் கடவுள் அவருக்கு வரம் அளிக்கமாட்டார். தேர்தல் மூலம் கடவுள் அவருக்கு தண்டனைதான் கொடுப்பார். அதிமுகவிற்குதான் கடவுள் வரம் கொடுப்பார். மக்களிடம் உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கும். பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார்” என்று கூறினார்.

—–

Related posts