பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரையும் விடுதலை செய்யவேண்டும்


இளவரசிக்கும் கொரோனா தொற்று..

பெங்களூரு சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா உடல் நலக்குறைவால் விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவரது சளி மாதிரியை சிறை மருத்துவ குழுவினர் எடுத்து, பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர், சசிகலாவுடன் தொடர்பில் இருந்த பெண் வார்டன்கள், பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களின் பரிசோதனை முடிவு இன்று வெளியிடப்பட்டது. அதில் பெங்களூரு சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இளவரசிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவரையும் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க பெங்களூரு சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
—–
பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரையும் விடுதலை செய்யவேண்டும்

பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, வழக்கில் முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாகேஸ்வராவ், அப்துல் நசீர் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து எடுக்கப்பட்ட சட்டப்பேரவை தீர்மானம் குறித்து தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு வழக்கிறஞர் தெரிவித்தார்.
விடுதலை தொடர்பான குழப்பத்தை தெளிவுபடுத்தக் கோரி பேரறிவாளன் தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அம்மா அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் மாண்புமிகு அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் தான்” என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.
—–
சசிகலா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

சசிகலா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு சுவாச பிரச்சினை குறைந்து உள்ளது என விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டால் விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ததை அடுத்து, சசிகலா உள்பட மூன்று பேரும் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் சசிகலாவுக்கு கடந்த 20-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவரை ஆம்புலன்சில் அழைத்து வந்து பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறை போலீசார் அனுமதித்தனர்.
அங்கு 2 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக சசிகலா நேற்று முன்தினம் கலாசிபாளையா பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நுரையீரல் நிலை குறித்து சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது நுரையீரலில் தீவிரமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை முடிவில், சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை கட்டுக்குள் இருப்பதாக அவர்கள் கூறினர். சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று பிரச்சினை நீண்டகாலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
நுரையீரலில் தீவிர தொற்று ஏற்பட்டுள்ளதால், அது நிமோனியா பாதிப்பாக கருதப்படுகிறது. தற்போது அவருக்கு காய்ச்சல் குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
விக்டோரியா மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிக்கையில் சசிகலா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு சுவாச பிரச்சினை குறைந்து உள்ளது என கூறி உள்ளது.
——

என்னை யாரும் அடிமையாக நடத்த முடியாது, விலைகொடுத்து வாங்கவும் முடியாது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. அந்த வகையில் ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் என்னை யாரும் அடிமையாக நடத்த முடியாது, விலைகொடுத்து வாங்கவும் முடியாது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை போத்தனூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜமாத் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அதில் பேசிய அவர், “ அண்ணா கூறியதுபோல் ‘பதவி என்பது, தோளில் போட்டிருக்கின்ற துண்டு’. என்னை யாரும் விலை வாங்கவோ, அடிப்படுத்தவோ முடியாது. மதம், சாதி என்ற பெயரில் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் அவர்கள் உரிமையை அதிமுக அரசு பாதுகாக்கும். குடும்பத்தில் ஒருவனாக இருந்து சேவையாற்றி வருகிறேன். தமிழ்நாட்டில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். அதிமுக ஆட்சியில் இஸ்லாமிய பெண்கள் அதிக அளவில் படிக்கின்றனர். ஹஜ் பயண நிதியை மத்திய அரசு ரத்து செய்த போதிலும், அதிமுக அரசு ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்குகிறது” என்று தெரிவித்தார்.
—–

Related posts