இலங்கையின் விமான நிலையங்கள் முழுமையாக திறப்பு

கொரோனா பரவலைத் தொடர்ந்து, சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த இலங்கை விமான நிலையங்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமான சேவைகளுக்காக இன்று (21) முதல் திறக்கப்பட்டுள்ளன.

மத்தள மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையங்கள் இரண்டும், நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்திற்கொண்டு, சுகாதார பிரிவின் விசேட கண்காணிப்பின் கீழ் திறக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, முதல் வணிக விமானம் இன்று (21) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

ஓமான் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான WY 371 எனும் விமானம் ஓமானின், மஸ்கட்டிலிருந்து மு.ப. 7.40 மணிக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் 50 இலங்கையர்கள் வந்தடைந்துள்ளதோடு, அவர்கள் அனைவரும் கட்டயாக தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியில், நேர அட்டவணைக்கு உட்படாத முன் அனுமதியுடனான விமானங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டதோடு, வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதோடு, சரக்கு விமான சேவைகளும் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts