இலங்கை சினிமா தியேட்டர்களுக்கு ஒரு வருட கால அவகாசம்

கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை காரணமாக மின்சார கட்டண நிலுவைப் பணத்தை வழங்க முடியாத நிலையிலுள்ள சினிமா தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதனை மீள வழங்குவதற்கான கால அவகாசம் ஒன்றை வழங்க மின்வலு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கிணங்க இவ்வருடம் மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அவ்வாறு நிலுவைப் பணத்தை செலுத்த முடியாத சினிமா தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதற்கான கால அவகாசத்தை அடுத்த வருடம் டிசம்பர் மாதம் வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட 194 சினிமா தியேட்டர்களுக்கும் இச் சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமமான தவணை முறையில் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இக்காலப்பகுதியில் நிலுவைப் பணத்தை காரணங்காட்டி மின் துண்டிப்பு மேற்கொள்ளாமல் இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டு ள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அது தொடர்பில் அமைச்சர் டளஸ் அழகப்பெரும மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்கும் பணிப்புரைகளை வழங்கியுள்ளார். திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மேற்படி சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Related posts