ரஜினி அரசியல் விலகல் தலைவர்கள் கருத்துக்கள்..

ரஜினியின் முடிவை முழு மனதுடன் ஆதரிக்கிறேன் என்று அர்ஜுன மூர்த்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த அறிவிப்பு தொடர்பாக பலரும் அர்ஜுனமூர்த்தியின் கருத்தைத் தெரிவித்துக் கொள்ள ஆர்வமாய் இருந்தார்கள். ஏனென்றால் அவர் பாஜக கட்சியிலிருந்து விலகி ரஜினி தொடங்கவுள்ள கட்சியில் இணைந்திருந்தார். தற்போது ரஜினியின் இந்த அறிவிப்பு தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அர்ஜுனமூர்த்தி கூறியிருப்பதாவது:
“ரஜினியின் மனம் எவ்வளவு கடுமையான உளைச்சலில் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அவரது இந்த முடிவை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன்”
இவ்வாறு அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார்.
—–
ரஜினிகாந்த்தின் அரசியல் நிலை ஏற்புடையது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டும். அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதற்கு தமிழகத்தில் எதிர்பார்ப்பு இருந்தது. இன்று தனது நிலைப்பாட்டில் இருந்து மாறி கட்சி ஆரம்பிக்கவில்லை. காரணம் தனது உடல்நிலை குறித்து மிகுந்த அக்கறை காட்ட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். உடல் நலம் என்பது அனைவருக்கும் பொருந்தும். ரஜினி இவ்வாறு அக்கறை எடுத்திருப்பது ஏற்புடையது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அரசியல் ரீதியாக அதிமுகவின் கூட்டணியில் இருக்கிறோம். தொடர்ந்து பத்து வருட காலமாக அதிமுக அரசு தமிழக வளர்ச்சி பணிகளில் சிறப்புடன் பணியாற்றி கொண்டிருக்கிறது. எனவே, ரஜினிகாந்த் போன்றவர்கள் மக்கள் நலம் கருதி நல்லவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விருப்பம்”.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
——
அரசியலுக்கு வரவில்லை என்ற ரஜினியின் அறிவிப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று அளித்த பேட்டி: ரஜினி கலைத்துறையைச் சேர்ந்த நல்ல மனிதர், மனிதாபிமானம் மிக்கவர். நாட்டுப்பற்று மிக்கவர். இத்தனை வருடமாக தமிழ்நாட்டில் நான் நடித்துள்ளேன், அவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைக்கிறார். அதில் என்ன தவறிருக்க முடியும். இதில் இரண்டாவது கருத்தை ஏன் சொல்லவேண்டும். அதேபோன்று வரவில்லை என்பதற்காக தவறாக விமர்சனம் செய்வது கூடாது”.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
—–
அரசியலுக்கு வரமுடியவில்லை என்ற ரஜினிகாந்தின் அறிவிப்பு பேரதிர்ச்சி தருகிறது: ரஜினி மக்கள் மன்ற நெல்லை மாநகர துணைச் செயலாளர் கருத்து..கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வரமுடியவில்லை என்ற ரஜினிகாந்தின் அறிவிப்பு பேரதிர்ச்சியாக இருப்பதாக திருநெல்வேலி மாநகர ரஜினி மக்கள் மன்ற துணைச் செயலாளர் எம். வீரமணிகண்டன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:திருநெல்வேலி மாநகரில் மொத்தமுள்ள 450 வாக்கு சாவடிகளில் 250-ல் கமிட்டிகளை அமைத்து முடித்திருக்கிறோம். இதுபோல் திருநெல்வெலி, தென்காசி மாவட்டங்களில் 2950 வாக்கு சாவடிகளில் 60 சதவிகிதம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டன.
அரசியல் கட்சி தொடங்குமுன் அனைத்து வாக்கு சாவடிகளிலும் கமிட்டிகளை அமைத்து முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் இரவு பகலாக பணிகளில் ஈடுபட்டிருந்தோம். இந்நேரத்தில்தான் தலைவரிடமிருந்து வந்த அறிவிப்பு பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது.
இதை மனதால் ஏற்க முடியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை. இப்படி ஒரு தலைவர் எந்த தொண்டனுக்கும் அமையக்கூடாது.
1996-ல் இருந்தே தலைவர் கட்சியை தொடங்குவார் என்று என்னைப்போன்ற லட்சக்கணக்கானோர் எதிர்பார்த்திருந்தோம். அவரும் அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை சொல்லவில்லை.
திரைப்படங்களிலும், பேட்டிகளிலும், தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் செயல் என்று எப்போதும் மேலே கையை காட்டிவிட்டு சென்றுவிடுவார்.
அதனால் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் திடீரென்று தலைவர் அறிவித்துள்ளதை மனதால் ஏற்க முடியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை. இப்படி ஒரு தலைவர் எந்த தொண்டனுக்கும் அமையக்கூடாது என்று கவலை தெரிவித்தார்.
—-
என் ரஜினி எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் இன்று (டிச.29) திறந்த வாகனத்தில் பொதுமக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர், ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா என்று விமர்சனம் செய்கிறார்கள். 44 ஆண்டுகால ஆட்சியில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே சினிமாவில் தொடர்பு உள்ளவர்கள்தான். எங்களை வைத்து நீங்கள் அரசியல் செய்யலாம். நாங்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? ரஜினி எடுத்த முடிவில் சற்றே ஏமாற்றம் இருந்தாலும் அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும்”.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
—-
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என அறிவித்ததை நான் மனபூர்வமாக வரவேற்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல்நிலை தான் முக்கியம் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என அறிவித்ததை நான் மனபூர்வமாக வரவேற்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல்நிலை தான் முக்கியம்.
தமிழக முதல்வர் யார் என்பது குறித்து தமிழக அமைச்சர்களோ, பாரதிய ஜனதா கட்சியினரோ சொல்வதைக் கேட்கவேண்டாம். அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். இதில் எந்த மாற்றமும் கிடையாது.
தே.மு.தி.க., கட்சி அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. பாரதிய ஜனதாவும் அதிமுக கூட்டணியில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related posts