அமெரிக்கா நான்கு விதமான நெருக்கடிகளை எதிர்கொள்கிறது

நமது நாடு ஒரே நேரத்தில் நான்கு விதமான வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது என்று அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ பைடன் கூறும்போது, “கரோனா வைரஸ், காலநிலை மாற்றம், பொருளாதாரம், இனரீதியான போராட்டம் ஆகிய நான்கு விதமான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறோம். வரும் ஜனவரி முதல் நேரத்தை வீணக்கடிக்க மாட்டோம். அதனால் முதல் நாளிலிருந்து நானும் எனது அணியும் நடவடிக்கை எடுக்கத் தயாராவோம்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.
வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதிகள் வாக்குகளில், 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகளின் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
ஜனவரி 20-ம் தேதி வரை ட்ரம்ப் அதிபர் பதவியில் இருப்பார். அதன் பிறகு ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் பதவியேற்பார்.

Related posts