பாரியளவிலான கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை

நத்தார் பண்டிகை மற்றும் 2021 புதுவருட பிறப்பை முன்னிட்டு பாரியளவிலான கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி இல்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில், நத்தார் தினத்துக்கும், 2021 ஆம் ஆண்டுக்கான புதுவருட பிறப்புக்கும் இன்னமும் சில தினங்களே உள்ளன. அதற்கமைய கடந்த வருடங்களைப் போன்று இந்த நிகழ்வுகளை கொண்டாடும் வகையில் பாரியளவிலான கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்த இம்முறை
அனுமதி வழங்கப்படமாட்டாது.

எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய அனைவரும் தமது குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் இணைந்து வீடுகளிலேயே கொண்டாட வேண்டும். தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக பாரியளவிலான கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதால் வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழுமையான ஒத்துழைப்பை மக்களிடம் எதிர்பார்க்கிறோம் என்றார்.

Related posts