இரண்டு பெரிய கட்சிகளில் இருந்து அழைப்பு கஸ்தூரி

இரண்டு பெரிய கட்சிகளில் இருந்து தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், எந்த கட்சியில் சேருவேன் என்பது குறித்து 20 நாளில் அறிவிப்பேன் என்றும் நடிகை கஸ்தூரி கூறினார்.
நடிகை கஸ்தூரி பேட்டி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் தனியார் செல்போன் நிறுவன ஷோரூம் திறப்பு விழாவில் கலந்து ெகாள் வருகை தந்த நடிகை கஸ்தூரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சுலபமாக வந்து விட முடியாது
மக்கள் எதிர்பார்க்க கூடிய ஒரு நல்ல தேர்தலாக இந்த சட்டமன்ற தேர்தல் அமையும். மாற்றம் வந்தே தீரும். ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சிகள் மறுபடியும் ஆட்சிக்கு வந்தாலும் அவ்வளவு சுலபமாக வந்துவிட முடியாது.
மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு இரண்டு கட்சிகள் மட்டும் இல்லாமல் பல வாய்ப்புகள் வந்துள்ளது. அது ஒரு நல்ல விஷயம். ரஜினி தனித்து போட்டியிட்டால் அது தி.மு.க.வுக்கு அனுகூலமாக இருக்கும்.
நல்லவர்கள் வரவேண்டும்
ரஜினி கூட்டணி அமைத்து போட்டியிட்டால் பா.ஜனதாவுக்கு அனுகூலமாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. நல்லவர்கள் ஆடசிக்கு வரவேண்டும். ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கொரோனா காலத்திலும், புயல் காலத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அம்மாவின் ஆட்சியில் அம்மா உணவகங்கள் பாப்புலர் ஆன திட்டமாக இருந்தது. எடப்பாடி நன்றாக ஆட்சி செய்து வருகிறார்.

20 நாட்களில் முடிவு
தொகுதி மக்களும் அவர்களுடைய தேவையை அனுசரித்து அவர்களுக்கான பிரதிநிதியை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒட்டகத்தை கூடாரத்திற்குள் விட்ட கதைதான், கார்ப்பரேட் நிறுவனங்களை உள்ளே விடுவது. விளைநிலங்களை கூறுபோட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்க கூடாது. அரசாங்கம் செய்ய வேண்டிய பொறுப்புகளில் இருந்து அரசாங்கம் விலகக்கூடாது.

மத்தியில் இரண்டு பெரிய கட்சிகள் இல்லை. ஒரே பெரிய கட்சி தான் உள்ளது. மாநிலத்தில் இரண்டு பெரிய கட்சிகளிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. மற்ற கட்சிகளில் இருந்தும், புதிதாக கட்சி தொடங்குபவர்களிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வருகிறது. எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து 20 நாட்களில் எனது முடிவை அறிவிப்பேன்.

Related posts