5 நாட்களுக்கு வேறு படம் வரக்கூடாது மாஸ்டர் நிபந்தனை..!

பொங்கல் விருந்தாக வரும் விஜயின் “மாஸ்டர் படம் ‘ரிலீஸ்’ ஆகும் நாளில் இருந்து 5 நாட்களுக்கு வேறு படங்களை திரையிடக்கூடாது” என்ற தயாரிப்பாளர்களின் நிபந்தனையை தியேட்டர் அதிபர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில், அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்து இருக்கிறார். படம் முடிவடைந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

இந்தப் படத்தை ‘ஓ.டி.டி’யில் வெளியிட முதலில் முயற்சிகள் நடந்தன. தயாரிப்பாளர்களும், தியேட்டர் அதிபர்களும் கேட்டுக்கொண்டதன் பேரில், ‘மாஸ்டர்’ படத்தை தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் பிரிட்டோ, லலித் குமார் ஆகிய இருவரும் சம்மதித்தார்கள்.

அதைத்தொடர்ந்து, ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், அந்த படத்தை தியேட்டர்களில் திரையிட படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு நிபந்தனையை விதித்து இருக்கிறார்கள். “படம் ‘ரிலீஸ்’ ஆகும் நாளில் இருந்து 5 நாட்களுக்கு வேறு படங்களை திரையிடக்கூடாது” என்ற அவர்களின் நிபந்தனையை தியேட்டர் அதிபர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

இது பற்றி ஒரு தியேட்டர் அதிபர் கூறியதாவது:-

‘கொரோனா பயம் காரணமாக தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதில்லை. பத்து பதினைந்து பேர்கள் மட்டுமே படம் பார்க்க வருகிறார்கள். இதற்கு அறிமுகம் இல்லாத நடிகர்களின் படங்களும் ஒரு காரணம். பிரபல நடிகர்களின் படங்களை திரையிட்டால் மட்டுமே ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வரும்.

பத்து பதினைந்து பேர்களை வைத்து காட்சிகளை நடத்த முடியாது. மின்சார கட்டணத்துக்கு கூட போதாது. தியேட்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. இந்த பிரச்சினை காரணமாக 400 தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன.

அதனால்தான் விஜய் போன்ற பிரபல நடிகர்களின் படங்களை எதிர்பார்க்கிறோம். பிரபல நடிகர்களின் படங்களை திரையிட்டால் மட்டுமே கூட்டம் வரும் என்று நம்புகிறோம்.”

இவ்வாறு அந்த தியேட்டர் அதிபர் கூறினார்.

Related posts