சேரன் பிறந்த நாள் ஸ்பெஷல்..

தமிழ் சினிமாவில் யதார்த்தமான உயிரோட்டமிக்க திரைப்படங்களை இயக்கி தமிழர்களின் மனங்களில் என்றென்றும் மறக்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்ட இயக்குநர் சேரன் இன்று (டிசம்பர் 12) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
மதுரைக்கு அருகே பழையூர்ப்பட்டி எனும் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் சேரன். திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வத்தில் சென்னைக்குக் குடியேறியவர் கே.எஸ்.ரவிகுமார் இயக்குநராக அறிமுகமான ‘புரியாத புதிர்’ படத்திலிருந்து அவருடைய உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ படங்களில் துணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.
மதிப்பைப் பெற்றுத் தந்த மகத்துவப் படைப்புகள்
‘பாரதி கண்ணம்மா’ சேரன் எழுதி இயக்கிய முதல் திரைப்படம். கிராமத்துச் சூழலில் பொருளாதார, சாதி வேறுபாடுகளைக் கடந்த காதலை உயிர்ப்புடனும் நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் கெட்டிதட்டிப்போன கிராமத்துச் சூழலில் சாதி கடந்த காதல் எதிர்கொள்ளும் துயர முடிவை முகத்தில் அடிக்கும் யதார்த்தத்துடனும் பதிவு செய்த அந்தப் படம் தலைசிறந்த படைப்பாளி ஒருவரின் வருகைக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்தது. ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்ட அந்தப் படம் சாதிய அமைப்புகளின் எதிர்ப்பைக் கடந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது சமூக மாற்றம் தொடங்கிவிட்டதற்கான அடையாளமும்கூட.

Related posts