ரஜினி தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்

ரஜினியின் அரசியல் வருகைக்கு, திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி தனது அரசியல் வருகையை உறுதி செய்தார் ரஜினி. அதற்குப் பிறகு பலமுறை அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு கருத்துகள், சர்ச்சைகள் எழுந்து வந்தன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காகக் கட்சித் தொடக்கம் உள்ளிட்ட பணிகளைத் தொடங்கினார் ரஜினி.
அந்தச் சமயத்தில் தான் கரோனா அச்சுறுத்தலால் நிலைமை தலைகீழானது. அனைவருமே ரஜினி தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரமாட்டார் என்று பேசத் தொடங்கினார்கள். அனைத்தையுமே பொய்யாக்கும் விதத்தில் இன்று (டிசம்பர் 3) தனது அரசியல் வருகையை உறுதி செய்திருக்கிறார்.
ரஜினியை அரசியல் வருகைக்கு, தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்து வருகிறார்கள். கார்த்திக் சுப்புராஜ், அனிருத், லாரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமன்றி, சமூக வலைதளத்தில் பலருமே ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்றுள்ளனர்.
—-
கடினமான கரோனா காலத்தில் தங்கள் உடல்நலனைக் கூட கருத்தில் கொள்ளாமல் மக்களுக்காகச் சேவை செய்ய முடிவு செய்துள்ளீர்கள் என்று ரஜினிக்கு லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக ரஜினியின் அரசியல் வருகை குறித்துப் பல்வேறு செய்திகள், தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. சில தினங்களுக்கு முன்பு மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் ரஜினி. அதனைத் தொடர்ந்து தனது அரசியல் வருகை குறித்து ரஜினி எப்போது வேண்டுமானாலும் அறிக்கை விடலாம் என்ற சூழல் நிலவியது.
அதன்படி இன்று (டிசம்பர் 3) ரஜினி தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகவும், டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று கருத்துகளைத் தெரிவித்து வந்தவர் லாரன்ஸ். தற்போது அரசியல் வருகையை ரஜினி உறுதி செய்திருப்பது தொடர்பாக லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“உங்களின் லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானும் இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தேன். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன். இந்தக் கடினமான கரோனா காலத்தில் தங்கள் உடல்நலனைக் கூட கருத்தில் கொள்ளாமல் மக்களுக்காகச் சேவை செய்ய முடிவு செய்துள்ளீர்கள். உங்கள் கனவு நிச்சயமாக நனவாகும்”.
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Related posts