ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியானது

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல

என்ற ஹேஷ்டாக்குகளும் இடம் பெற்றுள்ளன.

இதுபற்றி அவரது டுவிட்டரில் வெளியிடப்பட்ட மற்றொரு செய்தியில், வர போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!!! என்றும் தெரிவித்து உள்ளார்.
நடிகர் ரஜினியின் அரசியல் அறிவிப்பு டுவிட்டரில் இப்போ இல்லேன்னாஎப்பவும்_இல்ல ஹேஷ்டேக்! டிரெண்டாகி உள்ளது

ரஜினியின் அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமனம்; கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூண மூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது, தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி, அதில் தோற்றால் அது மக்களின் தோல்வி என்றே அர்த்தம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தோம், அதேபோல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தோம், கொரோனாவை எதிர்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. மருத்துவர்கள் அறிவுறுத்தல் காரணமாக என்னால் மக்களை நேரடியாக சந்திக்க முடியவில்லை தமிழக மக்களின் பிரார்த்தனையால் தான் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து திரும்பி உயிரோடு வந்தேன்…

ஆனால் அதை பொருட்படுத்தாமல் என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன் அரசியல் மாற்றம் தேவை… கட்டாயம் நிகழும் என கூறி உள்ளார்.
ரஜினிகாந்த் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் , இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மதுரை அண்ணா நிலையம் எதிரே உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்த அறிவிப்பு தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி ஏராளமான திரையுலகினரையும் உற்சாகப்படுத்தி உள்ளது .

ரஜினியின் அரசியல் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே திரையுலகினர் பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Related posts