அதுல்யா ரவி மீது படக்குழுவினர் குற்றச்சாட்டு

அதுல்யா ரவி மீது ‘என் பெயர் ஆனந்தன்’ படக்குழுவினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேலும், புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
‘அடுத்த சாட்டை’, ‘நாடோடிகள் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் அதுல்யா ரவி. சில ஆண்டுகளுக்கு முன்பு ‘என் பெயர் ஆனந்தன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார். ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடித்துள்ளார்.’என் பெயர் ஆனந்தன்’ திரைப்படம் சில சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு சிறந்த படத்துக்கான விருதினையும் வென்றுள்ளது. தற்போது நவம்பர் 27-ம் தேதி வெளியீட்டுக்குத் திட்டமிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு.
இதில் பங்கேற்க அதுல்யா ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன்.
அவர் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:
“நான் இந்தப் படத்தில் நடிக்கும்போது குண்டாக இருந்தேன். இப்போது ஒல்லியாகிவிட்டேன். எனது மார்க்கெட் போய்விடும் என்கிறார் அதுல்யா ரவி. இதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
இந்தப் படம் தொடங்கும்போதே, முதலில் திரைப்பட விழாக்களுக்கு எல்லாம் அனுப்பிவிட்டுத் தாமதமாகத்தான் வெளியிடுவேன் என்று அதுல்யா ரவியிடம் கூறினேன். அப்போது உங்களுடைய விளம்பரப்படுத்துதல் தேவை. ஆகையால்தான் உங்களைப் படத்தில் ஒப்பந்தம் செய்கிறேன் என்றும் கூறினேன்.
திட்டமிட்டபடி படத்தை முடித்து, ஓராண்டு முழுக்க அனைத்துத் திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பினேன். பின்பு, ஓராண்டு விளம்பரம் செய்தோம். அதற்குள் கரோனா வந்துவிட்டதால் கூடுதலாக ஓராண்டு ஆனது. அதற்குள் அதுல்யா பெரிய படங்களில் எல்லாம் நடிக்கத் தொடங்கிவிட்டார். இது சந்தோஷம்தான். நான் வெளியிடும்போது, அவருடைய விளம்பரப்படுத்துதலை எதிர்பார்ப்போம் அல்லவா. அவர் அதைச் செய்யாததால் ஒரு தரப்பு மக்களுக்குப் போய்ச் சேராதோ என நினைக்கிறேன்
டீஸர், ட்ரெய்லர் எல்லாம் உங்களுடைய சமூக வலைதளத்தில் ஷேர் செய்யுங்கள் என்று அதுல்யாவிடம் கேட்டோம். அதைக் கூட அவர் செய்யவில்லை. நான் சம்பள பாக்கி எல்லாம் வைக்கவில்லை. அவருக்கு என்ன சம்பளம் பேசினோமோ, அதைக் கொடுத்துவிட்டேன். அதற்கான பணப் பரிவர்த்தனை ஆதாரம் கூட உள்ளது.
இப்போது விளம்பரப்படுத்துதலைப் புதிதாகச் செய்யலாம் என நினைத்து, போட்டோ ஷூட்டுக்குத் திட்டமிட்டேன். அதற்கு அதுல்யா ரவியை அழைத்தோம். 1 லட்ச ரூபாய் கொடுத்தால் மட்டுமே வருவேன் என்றார். அந்த ரூபாயைக் கொடுத்து போட்டோ ஷூட் பண்ணும் நிலையில், நானோ எனது அணியினரோ இல்லை.
சின்ன படம் என்பதால், ஒப்பந்தம் எல்லாம் போட வேண்டும் என்பது தெரியாது. ஆனால், அவருக்குச் சம்பளம் கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை வைத்துப் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம்”.
இவ்வாறு ஸ்ரீதர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Related posts