நான் பிரமாதமான நடிகன் அல்ல என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, காளி வெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தீபாவளி வெளியீடாக நவம்பர் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
‘சூரரைப் போற்று’ படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர்களை ஜூம் செயலி வழியாக சந்தித்துப் பேசினார் சூர்யா.
அப்போது, ” ‘சூரரைப் போற்று’ படத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால் எது” என்ற கேள்விக்கு சூர்யா கூறியதாவது:
“இந்தப் படத்தில் மனைவியிடம் 12 ஆயிரம் ரூபாய் கடன் தர்றீயா என்று கேட்கும் அளவுக்கு உடைந்து போய் தரையோடு தரையாக இருப்பது மாதிரியான கேரக்டர். நான் ஒரு பிரமாதமான நடிகன் கிடையாது. என்னால் கேமரா முன்னால் உடனே நடிக்க முடியாது.
ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் கதாபாத்திரமாக வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், எனக்கு ஒரு கதையில் என் வாழ்க்கையில் நடந்த எமோஷன் இருந்தது என்றால் தைரியமாக நடிக்கத் தொடங்கிவிடுவேன். இயக்குநர் சுதாவை எனக்கு முன்பே நன்றாகத் தெரியும் என்பதால், சில காட்சிகளுக்கு முன்பு நிறையப் பேசி நடித்தேன். அது மிக எளிதாகவே இருந்தது.
அதேபோல், ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்புக்கு முன்பே அனைத்து விஷயங்களுமே பேசி முடிவு செய்துவிட்டோம். ஆகையால் அனைத்துக் காட்சிகளுமே ஒரு டேக், 2 டேக் தான். சுதா ரொம்பவே உணர்ச்சிமிக்க இயக்குநர். அவர் கண்களில் கண்ணீர் வரும்போதுதான் சில காட்சிகள் ஓகே ஆகும்.
இந்தப் படத்தில் மொத்தம் 96 கதாபாத்திரங்கள் உள்ளன. ஒரு வசனம் பேசக் கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும், அலுவலகத்துக்கு வரவைத்து ஸ்கிரீன் டெஸ்ட் செய்துள்ளார் சுதா. க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியில் டிரைவர் ஒரு வசனம் பேசுவார். அந்த டிரைவரைக் கூட ஒரு நடிகராக, ஜூனியர் ஆர்டிஸ்ட்டாகப் பார்க்க முடியவில்லை. அந்த வசனம் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது மாதிரி இருந்தது. அந்த அளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அதிகம் மெனக்கெட்டார் சுதா”.
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

Related posts