இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டிய ‘மாயாபஜார் 2016’ ரீமேக்

மாயாபஜார் 2016′ தமிழ் ரீமேக் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ராதாகிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் ராஜ் பி.ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சுதா ராணி, அச்யூத் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கன்னடப் படம் ‘மாயாபஜார் 2016’. க்ரைம் காமெடி பாணியிலான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி தயாரித்து வருகிறார் இயக்குநர் சுந்தர்.சி. செப்டம்பர் 14-ம் தேதி இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பைத் திட்டமிட்டுத் தொடங்கினார்கள்.
பத்ரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகி பாபு, விடிவி கணேஷ், ரித்திகா சென் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இன்னும் ஒரு வாரத்தில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடையவுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கரோனா அச்சுறுத்தலால் முன்னேற்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்தி வருவது குறித்து இயக்குநர் பத்ரி கூறியிருப்பதாவது:
“குறைந்த ஆட்களைக் கொண்டு 70 பேருக்குள் இருக்குமாறு படப்பிடிப்பு நடத்துவது முதலில் சிரமமாக இருந்தாலும் அதற்கான முன் தயாரிப்புகளைச் சரியாகச் செய்துகொண்டு எந்தக் குறையும் இல்லாமல் நாங்கள் நடத்திக் கொண்டு வருகிறோம். இதற்குக் காரணம் சுந்தர்.சி சாரிடம் கற்றுக்கொண்ட திட்டமிடலும் சரியான நேர மேலாண்மையும்தான்.
அதுமட்டுமல்லாமல் படக்குழு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்துகொண்டே இருப்போம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சரியாகத் திட்டமிட்டு இந்தப் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றையும் விட பாதுகாப்புதான் முக்கியம் என்பதால் எல்லாச் சிரமங்களையும் அசௌகரியங்களையும் மறந்துவிட்டு அனைவரும் ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறார்கள்”.
இவ்வாறு இயக்குநர் பத்ரி தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவாளராக கிச்சா, இசையமைப்பாளராக சத்யா, கலை இயக்குநராக ப்ரேம் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.

Related posts