‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்திவைப்பு?

கரோனா தொற்று அதிகரிப்பால், ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் ரஜினி நடிப்பில் உருவாகி வந்த ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
இதுவரை 50% படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்துள்ளது. தற்போது தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்துவிட்டாலும், இன்னும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. அக்டோபர் முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்காகப் படக்குழுவினர் அனைவரிடமும் தேதிகள் வாங்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியானது.
ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்க ரஜினி ஒரு மாதம் தேதிகள் கொடுத்திருந்ததாகத் தெரிகிறது. தற்போது கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், இப்போதைக்குப் படப்பிடிப்பு வேண்டாம் என்று படக்குழு ஒத்திவைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நடிகர்கள் சிலர் மற்ற படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளனர்.
இனி முழுமையாக கரோனா தொற்று குறைந்தால் மட்டுமே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. இதனால் ‘அண்ணாத்த’ பட வெளியீட்டுத் தேதியிலும் பெரிய மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Related posts