ரூ.2 கோடி இழப்பீடு கோரி நடிகை கங்கனா மனு தாக்கல்

தனது பங்களாவை இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு கோரி நடிகை கங்கனா மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனு, 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

மராட்டிய மாநிலத்தை ஆளும் சிவசேனா கட்சியுடன் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, நடிகை கங்கனா ரணாவத்தின் மும்பை பங்களாவின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி நிர்வாகம் கடந்த 9-ந்தேதி இடித்தது.

இதற்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில் நடிகை கங்கனா மனுதாக்கல் செய்தார். அதன்பேரில், மேற்கொண்டு இடிப்பதற்கு நீதிபதி கதாவல்லா தலைமையிலான அமர்வு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், அந்த மனுவில், கங்கனா நேற்று திருத்தம் செய்து சமர்ப்பித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களை பாதிக்கும் சில விஷயங்களை கையாள்வது தொடர்பாக, சமீபத்தில் நான் தெரிவித்த கருத்துகளால், மராட்டிய மாநில அரசுடன் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

அதன் விளைவாக, அந்த கட்சி ஆளுங்கட்சியாக உள்ள மும்பை மாநகராட்சி, என் பங்களாவை இடித்தது. பங்களாவை பழுதுபார்க்க நான் 2018-ம் ஆண்டு அனுமதி பெற்றிருந்தேன். ஆனால், கடந்த 7-ந்தேதி மாநகராட்சி திடீரென நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கு பதில் அளிக்க வெறும் 24 மணி நேரமே அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்குள் நான் பதில் அளித்தபோதிலும், அவசரகதியில் நிராகரிக்கப்பட்டது.

மறுநாளே மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்களாவை இடித்தனர். அவர்கள் ஏற்கனவே அங்குதான் முகாமிட்டு இருந்தனர்.

எனவே, பங்களாவை இடிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் மாநகராட்சியிடம் இருந்துள்ளது. அதன் செயலை ‘சட்ட விரோதம்’ என்று அறிவிக்க வேண்டும். மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எனக்கு ரூ.2 கோடி இழப்பீடு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கங்கனா கூறியுள்ளார். இந்த மனு, 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே, போதைப்பழக்கம் என்று பேசி, இந்தி திரையுலகின் நற்பெயரை கெடுக்க சிலர் சதி செய்வதாக மாநிலங்களவையில் சமாஜ்வாடி எம்.பி. நடிகை ஜெயா பச்சன் பேசினார்.

அவருக்கு இதுகுறித்து ‘டுவிட்டர்’ பக்கத்தில் நடிகை கங்கனா கேள்வி எழுப்பி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

எனது இடத்தில் உங்கள் மகள் ஸ்வேதா இருந்தால், நீங்கள் இப்படித்தான் பேசி இருப்பீர்களா? திரையுலகில் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டி, திடீரென ஒருநாள் தூக்கில் தொங்கியவர், உங்கள் மகன் அபிஷேக் பச்சனாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் பேசி இருப்பீர்களா? எங்கள் மீதும் கருணை காட்டுங்கள்.

என்றாவது ஒருநாள் பிரதமர் மோடியை சந்தித்தால், திரையுலகினரின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts