நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவு கல்வியில் ஒரு பாடமாக ..

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் மூலமாக கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களை ஐ.நா சபைக்கு அழைத்துச் சென்று ‘கல்வியில் புதுமை’ என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் செய்து அவர்கள் கருத்துகளை ஐ.நாவில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஆறாவது இணையவழி ஆலோசனைக் கூட்டம் 05.09.2020 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். ஊடகப் பிரிவைச் சார்ந்த ​ேஜான் தன்ராஜ் இணைப்புரையாற்றினார்.

இக்கலந்துரையாடலில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியை ஷீலா ஸ்டீபன் தலைமை தாங்கினார். சிறப்புப் பேச்சாளர்களாக ஆர்.கே நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருத்திகா ராதாகிருஷ்ணன், பால்சன் குடும்பத்தின் தலைவர் டாக்டர் சாம் பால், பிரபல சமையல் கலை நிபுணர் செப் தாமு, ஆரோவில் இயற்கை பண்ணையின் நிறுவனர் கிருஷ்ணா மெக்கன்சி, பிரபல நியூட்ரிஷியன் ஷைனி சுரேந்தர், மலேசியாவின் முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் , மாக்ஸ் விருந்தோம்பலின் இயக்குனர் அருண்காந்தி, உடல் கட்டு ஆர்வலர் தொலைக்காட்சி நடிகை ரம்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் உடற்கல்வி மற்றும் ஆரோக்கியம் உணவு முறைகள் குறித்து விரிவாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய ரம்யா “நம் உடலை பயிற்சிகள் ,உணவு பழக்கவழக்கங்கள் மேற்கொண்டு பாதுகாக்க வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட பயிற்சியும் உணவு முறையும் ஆரம்பக் கல்வியிலிருந்து அளிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அருண் காந்தி “படிக்கிற அனைவரும் ஏதோ ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்று இல்லாமல் அவரவர் திறமைகளை வைத்து அவரவர் சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக பயிற்சி முறைகளை நாம் மாற்றி அமைத்தால் உணவுத்துறை மிகப் பெரிய வரவேற்பும், வெற்றியும், பெறும்” என்றார்.

மலேசியாவின் முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் பேசும் போது தாய்ப்பாலின் பெருமையைப் பற்றியும், தாய்ப்பால்தான் ஒரு குழந்தைக்கு முழுமையான ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் கூறினார். ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி பேசும் பொழுது “நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளில் வருமுன் காப்பதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து இருக்கிறார்கள் , குறிப்பாக பத்தியம் இருத்தல் என்பது முன்னோடியாக விளங்குகிறது. ஊட்டச்சத்து கல்வியில் படிக்கின்ற பொழுதே விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகள் பற்றியும் சேர்த்து படிக்க வேண்டியது அவசியம்” என்றார்.

இயற்கை விவசாயத்தை போற்றும் வெளிநாட்டவரான கிருஷ்ணா மெக்கன்சி பேசும் பொழுது, இயற்கை முறையில் தயாரிக்கும் உணவு வகைகளான கீரை, வாழைத்தண்டு, முடக்கத்தான் கீரை போன்ற உணவு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் நம் பாரம்பரிய உணவில் மருத்துவ குணங்கள் உள்ளதால், நாம் இயற்கை முறையில் உள்ள உணவு வகைகளை அனைவரும் அறியும் வகையில் பாட திட்டத்தில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தினார். செப் தாமு பேசும் போது “நோய் எதிர்ப்பு சக்தி உள்ள நம்முடைய பாரம்பரிய முருங்கைக் கீரை, முருங்கைக் காய், தோடம்பழம் போன்றவற்றிலிருந்து புதிய புதிய வகை உணவுகள் தயாரிப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே எதிர்வரும் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் உணவு முறைகள் என்ற பாடத்திட்டத்தை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சாம் பால் பேசும் பொழுது “உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியத்தைத் தருகிறது. ஆரோக்கியம் எதையும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை தருகிறது. மாச்சத்து உணவைக் குறைத்துக் கொண்டு புரதச் சத்துக்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் சாப்பிடுகிற உணவில் புரதச் சத்துக்கள் அதில் அதிகரித்துக் கொண்டால் நாம் முழு ஆரோக்கியமாக இருக்க முடியும்” என்றார்.

கிருத்திகா ராதாகிருஷ்ணன் பேசுகிற பொழுது தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்தும் விரதம் இருப்பது முக்கியத்துவம் குறித்தும் குறிப்பிட்டார்.

துணைவேந்தர் சீலா ஸ்டீபன் பேசுகிற பொழுது, உடற்கல்வி என்றால் என்ன அதன் பலன்கள் என்ன என்பதை விரிவாக விளக்கமாக பேசினார்.

இறுதியாக கனடாவைச் சேர்ந்த ஆலன்டீன் மணியம் நன்றியுரை கூறினார்.

Related posts