திரையுலகில் நான் சந்தித்த அவமானங்கள்: 3

திரையுலகில் தனக்கு ஏற்பட்ட அவமானங்கள், புறக்கணிப்புகள் குறித்து பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் சமீரா ரெட்டி.
2002-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமீரா ரெட்டி. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். 2014-ம் ஆண்டு தொழிலதிபர் அக்‌ஷய் வர்தே என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, திரையுலகிலிருந்து ஒதுங்கினார்.
அக்‌ஷய் வர்தே – சமீரா ரெட்டி தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். அவ்வப்போது தனது உடல் எடை அதிகரிப்பு, உடல் எடை குறைப்பு, குழந்தை வளர்ப்பு உள்ளிட்டவை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை வெளியிடுவார் சமீரா ரெட்டி.
தற்போது நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும்போது தனக்கு ஏற்பட்ட புறக்கணிப்புகள் குறித்து சம்பவங்களுடன் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார் சமீரா ரெட்டி.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“மூன்று படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். ஒரு முறை ஒரு வாரிசு நடிகை எனக்குப் பதிலாக நடித்தார், இன்னொரு சமயம் படத்தின் நாயகன் வேறொரு நடிகையோடு நட்பில் இருந்ததால் அவரை நடிக்க வைத்தார்.
சம்பவம் 1
“நான் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருந்தேன். தயாரிப்பாளர் என்னை அவர் அலுவலகத்துக்கு அழைத்து, படத்திலிருந்து என்னை நீக்கிவிட்டதாகச் சொன்னார். எனக்குப் போதிய திறமை இல்லை என்றார்கள். நான் மோசமாக உணர்ந்தேன். எனக்கே என் திறமை மேல் சந்தேகம் வந்தது. என் அம்மாவிடம், அந்தத் தயாரிப்பாளர் சொன்னது சரிதானோ, நான் திரைப்படங்களுக்கு உகந்தவள் அல்ல என்றேன். ஆனால், பின்னர் என் நலவிரும்பி ஒருவர், எனக்குப் பதிலாக வேறொரு வாரிசு நடிகையை நடிக்க வைத்திருப்பதுதான் காரணம் என்றும், அந்த உண்மையைச் சொல்லும் தைரியம் அந்தத் தயாரிப்பாளருக்கு இல்லை என்றும் என்னிடம் கூறினார். எந்தப் படம் என்று என்னால் குறிப்பிட முடியாது. ஆனால் நான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் ஒரு படம் அது”.
“இந்தத் துறை எனக்கு நிறையத் தந்திருக்கிறது. துறைக்கு எதிராக என் மனதில் எதுவுமில்லை. இந்த வியாபாரம் குறித்து நான் தவறாகப் பேசவே மாட்டேன் என்றே இதுவரை சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் எனக்கு நல்லதே நடந்தது. திரைத்துறையை நான் மதிக்கிறேன். அதை எதிர்க்க முடியாது”.
சம்பவம் 2
“நான் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். திடீரென படப்பிடிப்பில் ஒரு முத்தக் காட்சியை எடுக்க வேண்டும் என்றார்கள். எனக்கு அது பற்றி முன்னரே தெரியாது. எனவே நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. ‘முசாஃபிர் படத்தில் செய்தீர்களே’ என இயக்குநர் என்னைச் சம்மதிக்க வைக்கப் பார்த்தார். அதற்கு நான், ‘ஆமாம், அதற்காக அதையே செய்வேன் என்று கிடையாது’ எனப் பதில் சொன்னேன். அதற்கு அவர், ‘இந்த விவகாரத்தைப் பார்த்துக் கையாளுங்கள். ஆனால் உங்களுக்குப் பதிலாக வேறொருவரை நடிக்க வைக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்’ என்றார்”.
சம்பவம் 3
இன்னொரு சந்தர்ப்பத்தில் பாலிவுட் நாயகன் ஒருவர் என்னைப் பற்றிப் பேசினார். ‘உன்னை அணுகவே முடியாது. போரடிக்கும் பெண் நீ. உன்னுடன் மீண்டும் பணியாற்ற வேண்டுமா என்று யோசிக்கிறேன்’ என்றார். நான் அந்தப் படத்துக்குப் பின் அந்த நடிகருடன் நடிக்கவில்லை.
இந்த ஒட்டுமொத்த விஷயங்களுமே பரமபத ஆட்டம் போலத்தான். நீங்கள் பாம்புகளைத் தாண்டி ஜாக்கிரதையாக உங்கள் பாதையில் செல்லத் தெரிந்துகொள்ள வேண்டும். நான் பார்ட்டிகளுக்குச் செல்ல மாட்டேன். படப்பிடிப்பு முடிந்து சக நடிகர்களுடன் நேரம் செலவிடமாட்டேன். அதற்குப் பதில் வீட்டுக்குச் சென்று டிவி பார்ப்பேன். நான் எப்போதுமே பலருடன் சகஜமாகப் பழகியதில்லை. அப்படி இருந்திருந்தால் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரியும். ஆனால் பரவாயில்லை. அதுதான் இந்தத் துறையின் தன்மை”.
இவ்வாறு சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

Related posts