பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்த அவலம்

மத்திய பிரதேசத்தில் ரூ.9 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் தொடங்கி வைப்பதற்கு முன்பே கனமழையில் இடிந்து விழுந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் கரையோர மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு நிறைந்த இடத்தில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அவர் நேற்று முன்தினம் ஹோசங்காபாத் மாவட்டத்திற்கும், நேற்று விதிசா பகுதிக்கும் சென்றார். இன்று படகு ஒன்றில் சென்று வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் வெயின்கங்கா ஆற்றின் மீது போக்குவரத்திற்காக ரூ.9 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டது. இது முறைப்படி இன்னும் தொடங்கி வைக்கப்படவில்லை. ஆனால், போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பாலத்தின் ஒரு பகுதி தொடங்கி வைப்பதற்கு முன்பே கனமழையில் இடிந்து விழுந்துள்ளது. இதுபற்றி கியோலரி தொகுதி எம்.எல்.ஏ. ராகேஷ் பால் சிங் கூறும்பொழுது, கனமழையால் ஆற்றில் நீரின் அளவு உயர்ந்துள்ளது. குப்பைகள் பாலத்தில் சிக்கி கொண்டன. மழைநீரால் அழுத்தம் அதிகரித்து பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது என கூறியுள்ளார்.

Related posts