சிறீலங்கா பாராளுமன்ற முதல் அமர்வு.. அதிரடி கேள்வி பதில் அசத்தல்..

சிறீலங்கா பாராளுமன்ற முதல் அமர்வு.. அதிரடி கேள்வி பதில் அசத்தல்..
தாயகத்தில் இருந்து டிவனியா டென்மார்க்கில் இருந்து கி.செ.துரை
———
கேள்வி 01 : இலங்கை பாராளுமன்றில் ஒலித்த உரைகள் உங்கள் உள்ளக்கண்ணாடியில் வரையும் ஓவியத்தை வார்த்தைகளாக கூற முடியுமா…?

பதில் : அங்கு பேசிய அனைவரும் தேர்தலில் வென்றவர்.. ஆனால் அரசியலில் அனைவரும் தோற்றவர்களே என்பதற்கு அவர்கள் முதல் உரைகளே போதுமானவை..

கேள்வி 02 : நேற்றைய ரணில் பாராளுமன்றுக்கும் இன்றைய புதிய பாராளுமன்றுக்கும் என்ன வேறுபாடு.?

பதில் : அவர்கள் மிளகாய் தூளை தண்ணீரில் கரைத்து முகத்தில் அடித்தார்கள், இவர்கள் மிளகாய்த்தூளை வார்த்தைகளில் கலந்து முகத்தில் அடிக்கிறார்கள்.

கேள்வி 03 : சி.வி. விக்னேஸ்வரன் பேச்சு எப்படியிருக்கிறது..?

பதில் : ஒரு நீதிபதி தனை மறந்த கிரிமினல் வக்கீலானார்.. அதுபோல கீழிருந்த 224 கிரிமினல் வக்கீல்களும் மேலேறி நீதிபதிகளானார்கள்.. அதுதான் ஒரு குற்றவாளிக்கு 224 தீர்ப்பு வழங்க அலைகிறார்கள்.

கேள்வி : 04 கான்சாட் என்ற பாராளுமன்ற உரைகளின் பதிவேட்டில் இருந்து சி.வி.விக்னேஸ்வரன் உரையை நீக்க வேண்டுமா..?

பதில் : நீக்கலாம் அதற்கு முன் தமிழரை கள்ளத்தோணி என்று பேசியதையும், தமிழரின் தோலில் செருப்பு தைத்து நடப்பேன் என்று பேசியதையும் பழைய பதிவுகளில் இருந்து நீக்க வேண்டும் அல்லவா..?

கேள்வி : 05. அப்படியானால்கான்சாட்டை படிப்பவர்கள் இல்லை என்கிறீர்களா..?

பதில் : அப்படி படிப்போர் இருந்திருந்தால் இப்படியொரு பிரச்சனையே வந்திருக்காதே..!

கேள்வி : 06 தமிழ் வாக்காளர் பல கட்சிகளை தேர்வு செய்ய வேண்டுமென்று நாம் கூறியதை மக்கள் ஏற்றுள்ளார்கள் என்று சொல்லலாமா..?

பதில் : முடிவு அப்படித்தான் இருக்கிறது.. ஏன் ஜி.எல்.பீரீஸ் கூட அதை ஏற்றுக் கொண்டிருக்கிறாரே.. அதனால்தான் அபிவிருத்தியே வருகிறது என்கிறாரோ..? இது போதுமே..!!

கேள்வி : 07 : அப்படியானால் தமிழர் பகுதிகளுக்கு அபிவிருத்தி வருமா..?

பதில் : தலையில் முட்டை கூடையை வைத்துக் கொண்டு மாட மாளிகைக்கு கனவு கண்ட பருத்தித்துறை பவளக்கொடி பாடல் நினைவிருந்தால் ஒரு தடவை மனதில் பாடுங்கள்..

கேள்வி : 08 தெற்கிலிருந்து அபிவிருத்தி நிதியை அள்ளி வருவதாகக் கூறிய அங்கயன் ராமநாதனை ஆளில்லாத சபைக்கு மாலை நேர சபாநாயகராக்கிவிட்டார்களே..?

பதில் : அவர் உங்களுக்கு தந்த பேட்டியை தெற்கே கேட்டிருக்கிறார்கள். வடக்கில வாயைத்திறந்தால் தெற்கில் தேள் கொட்டும் என்பதை பாவம் இளம் அரசியல்வாதியால் புரிய முடியவில்லை.

கேள்வி : 09 : புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார் என்ற சம்மந்தனின் குரலில் புதுமை உண்டா..?

பதில் : அவர் ஆதரவு இல்லை என்றால்தான் அது புதுமை..! அவரின் ஆதரவால்தான் மைத்திரி கூட அவர் தலையில் மிளகாய் அரைத்ததை அதற்குள் மறந்துவிட்டார்.

கேள்வி : 10 : அப்படியானால் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் ஆதரவு உரைபற்றி..

பதில் : இப்போது எல்லோரும் டக்ளஸ் ஆகிவிட்டதால் அவர் ஆதரவு எடுபடவில்லை.. ஆனால் டக்ளசிற்கு புலம் பெயர் தமிழரிடம் சாப விமோசனம் பெற்றுக் கொடுத்த பெருமை தமிழரசு தமிழ் காங்கிரசையே சாரும்.

கேள்வி : 11 : வியாழேந்திரன் பெற்ற மந்திரிப்பதவியின் மந்திர சக்தி எப்படியிருக்கும்..?

பதில் : சுமந்திரன், சிறீதரனுக்கு வரவேண்டிய மந்திரசக்தி பாவம் வியாழமாற்றத்தால் வியாழேந்திரனுக்கு போய்விட்டது. ஐந்து வருடங்கள் பெற்றோல் அடிக்காமல் ஜீப் ஓடலாம்.

கேள்வி : 12 : சாணாக்கியனின் பேரை வைத்த கூட்டமைப்பு உறுப்பினர் மூன்று மொழிகளில் பேசியது புலம் பெயர் தமிழர் சிலருடைய உச்சியை குளிர வைத்தது எதனால்..?

பதில் : சிங்களம் ஆங்கிலத்தை விட அவருடைய தமிழ் மிகவும் வீக்காக இருப்பதால் புலம் பெயர் தமிழர் தங்கள் பிள்ளைகள் போல நினைத்து மனம் குளிர்ந்திருக்கலாம்.

கேள்வி : 13 : அங்கயன் ஏழு நிமிடங்கள் கொடுக்க சாணாக்கியன் பத்து நிமிடங்கள் கேட்டது எதனால்..?

பதில் : பத்து நிமிடம் கொடுத்தால் 20 நிமிடம் கேட்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர் அருகில் இருந்திருக்கலாம்.

கேள்வி : 14 : சித்தார்த்தன் பாராளுமன்றத்தில் உறங்குவதாக சிலர் கூறுவது உண்மையா..?

பதில் : உறங்கச் சொல்லித்தானே அவரை அனுப்பியிருக்கிறார்கள். அவருடைய தந்தையாரின் தமிழரசு கட்சியை சேர்ந்த முன்னாள் உடுப்பிட்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்கொடி பாராளுமன்றில் தூக்கம் போட்டு 100 ரூபா தண்டம் கட்டியிருக்கிறார்.. இதுதான் தமிழரசுக் கட்சியின் பெருமை..! ஜெயக்கொடி போல தமிழ் குடியின் பெருமை காக்கவும் சில மைந்தர்கள் பாராளுமன்றம் போகத்தானே வேண்டும் ? சித்தார்த்தரான புத்தர் சிலைகள் கண் மூடி தூங்குவதை பார்த்து நம்ம சித்தார்த்தரும் தூங்கினாரோ யார் அறிவார்.

கேள்வி : 15 : மாவையாரின் எதிர்காலம் எதில் தங்கியிருக்கிறது..?

பதில் : எல்லாமே சம்மந்தனில்தான் தங்கியிருக்கிறது.

கேள்வி : 16 : அப்படியானால் சசிகலா ரவிராஜ் நிலை..?

பதில் : தமிழகத்தின் சசிகலா நடராஜ் போல விடுதலை திகதி தெரியவில்லை.

கேள்வி : 17 : இன்றைய பாராளுமன்றின் பிரதான குறைபாடு..?

பதில் : தமிழ் உறுப்பினர் பேசும்போது சபை வெற்றிடமாகக் கிடக்கிறது.. அதுதான் பொது மக்கள் கலரி மூடப்படுகிறது போலும்.

கேள்வி : 18 : பாராளுமன்றம் என்ன செய்தால் நாம் மகிழ்ந்திருக்கலாம்..?

பதில் : நிதி எங்கிருந்து கிடைக்குமென யாருக்காவது தெரிந்திருந்தால்..மகிழ்ந்திருக்கலாம்.

கேள்வி : 19 : என்ன செய்தால் விடிவு வரும்..?

பதில் : பழையதை எல்லாம் தூக்கி வீசி, யதார்த்தத்தை உணர்ந்து.. மனம் விட்டு பேசி, கையில் எதுவும் இல்லை என்ற உண்மையை வெளிப்படையாகவே கூறி, அனைவரும் நாட்டை முன்னேற்ற வேண்டும்.

கேள்வி : 20 : அதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும்.?

பதில் : விட்ட பிழைகளை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். சீனா, இந்தியா, அமெரிக்கா காடு மலை தவிடு பொடி என்று கூறாமல், அந்த மண்ணின் மக்களிடம் போக வேண்டும். மக்கள் மனங்களில் உள்ள இருளை விலக்கும் உண்மை ஒளியை ஏற்றாமல் சீனாவிலும் இந்தியாவிலும் விளக்கேற்றி இலங்கையின் இருளை போக்க முடியாது என்பதை உணர வேண்டும். இலங்கையை நம்பி சீனாவும் இல்லை இந்தியாவும் இல்லை அப்படியிருக்க இலங்கை மட்டும் இவர்களை ஏன் நம்ப வேண்டும் என்ற புதுக்குரல் மலர வேண்டும்.

வணக்கம் மீண்டும் ஒரு பேட்டியில் சந்திப்போம்.
வணக்கம்.

நாள் 28.08.2020

Related posts