எஸ்பிபி 90 சதவீத மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார்

எஸ்பிபி 90 சதவீத மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார். சிகிச்சை பலனளித்து வருகிறது என்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பி.க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்.பி.பி.க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து எஸ்.பி.பி.யின் மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 25) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
“மருத்துவர்களிடம் பேசினேன். எல்லாம் சகஜமான நிலையில் இருக்கிறது. நேற்று நான் சொன்னதைப் போல அப்பாவுக்கு சிகிச்சை பலனளித்து வருகிறது. 90 சதவீத மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார். என் அப்பாவுக்காக நீங்கள் காட்டியிருக்கும் அன்பும், அக்கறையும், செய்த பிரார்த்தனைகளுக்கும் எங்கள் குடும்பம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். அப்பா மீண்டு வர தீவிர சிகிச்சை அளித்து வரும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கும் அதன் மருத்துவர்களுக்கும் நன்றி.
அனைவருக்கும் மீண்டும் நன்றி. தொடர்ந்து பிரார்த்திப்போம். அப்பாவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்ப்போம் என நம்புகிறேன்.
ஒரு விஷயத்தைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். பலர் என்னை இந்தப் பகிர்வுகளை தமிழில் சொல்லச் சொல்லிக் கேட்கிறார்கள். அப்பாவுக்கு தேசம் முழுவதும் பல ரசிகர்கள் இருப்பதால்தான் ஆங்கிலத்தில் நான் பகிர்கிறேன். அப்பா பாடியிருக்கும் ஒவ்வொரு மொழியிலும் ஒரு பகிர்வு என்பது எனக்கு அதிக நேரத்தை எடுக்கும்.
நான் மருத்துவர்களுடன் பேசி வருகிறேன், பிரார்த்தனைக் கூட்டங்கள் நடக்கின்றன. நடுவில் ரசிகர்களுக்கும் செய்தி சொல்கிறேன். மொழி புரிந்தவர்கள் புரியாதவர்களுக்கு விளக்குங்கள். அப்படிச் செய்யும்போது இந்தச் செய்தியும் பரவும். நேர்மறை எண்ணங்களும் பரவும்.”
இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

Related posts