வீடியோ போட்டு விட்டு நடிகை தூக்கு போட்டு தற்கொலை

பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் அனுபமா பதக் (வயது 40). இவர் மும்பைக்கு வேலை தேடி சென்றுள்ளார். பின்னர் போஜ்புரி படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இதனால், மும்பையிலேயே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தற்கொலை குறிப்பு ஒன்றை எழுதி வைத்து விட்டு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு முந்தின நாள் பேஸ்புக்கில் லைவ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.

அதில் இந்தியில் பேசிய பதக், உங்களுக்கு ஏதேனும் சில பிரச்னைகள் உள்ளன மற்றும் தற்கொலை செய்ய போவது போன்று உணர்கிறேன் என யாரிடமேனும் கூறினால், அவர்கள் ஆணோ, பெண்ணோ எவ்வளவு நல்ல நண்பராக இருப்பினும், தங்களிடம் இருந்து விலகி இருங்கள் என கூறி விடுவார்கள்.

அதனால், யாரையும் நண்பராக நினைக்காதீர்கள். உங்களது பிரச்னைகளை பற்றி ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். என்னுடைய வாழ்க்கையில் கற்றவை இவை. மக்கள் சுயநலமுடையவர்கள். பிறரை பற்றி கவலைப்படாதவர்கள் என தெரிவித்து உள்ளார்.

அவர் எழுதி வைத்த தற்கொலை குறிப்பில், மலாடில் உள்ள விஸ்டம் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்து உரிய காலம் கடந்தும், பணம் திருப்பி தரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை கைப்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூனில் தற்கொலை செய்து கொண்டார். இதேபோன்று சமீபத்தில் இந்தி தொலைக்காட்சி நடிகர் சமீர் சர்மா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு நடிகை தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது.

Related posts