தமிழ் சினிமாவை தோற்கடிக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் புது வியூகம்..!

பாரதிராஜாவைச் சூழ்நிலை கைதி ஆக்கிவிட்டார்கள் எனவும் தயாரிப்பாளர் சங்கத்தை உடைக்க வேண்டாம் என்றும் தயாரிப்பாளர் தாணு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடக்கவிருந்த சூழ்நிலையில், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உயர் நீதிமன்றத் தலையீட்டின் பேரில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தச் சூழலில் தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிதாக சங்கமொன்றை உருவாக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் சங்கத்துக்கு இயக்குநர் பாரதிராஜா தலைவராகவும், டி.சிவா செயலாளராகவும், பொருளாளராக சத்யஜோதி தியாகராஜனும் பதவி வகிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இதனை பாரதிராஜா அறிக்கை மூலமாக உறுதிப்படுத்தினார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியது.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் தாணு, முரளி, கே.ராஜன், கமீலா நாசர் உள்ளிட்ட பலர் இன்று (ஆகஸ்ட் 6) காலை ஒன்று கூடி பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அந்தச் சந்திப்பில் தயாரிப்பாளர்கள் தாணு பேசியதாவது:

“பல்வேறு சாதனை படைத்த தயாரிப்பாளர்கள் அனைவருமே 1300 பேர் கொண்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் தற்போதைய காலத்தில் 50 – 100 பேர் வரை தான் படம் தயாரிப்பார்கள். மீதி அனைவருமே வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு, முன்பு படம் பண்ணினோம் இன்றைக்கு நாம் இந்த சூழலில் இருக்கிறோம். இந்தச் சங்கம் நமக்கு கொடையாக இருக்காதா என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு இன்சூரன்ஸ் போட்டுக் கொடுத்து, அதன் மூலம் சுமார் 900 உறுப்பினர்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். மாதம் 5000 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை சுமார் 200 பேருக்கு உதவியாக போய்க் கொண்டிருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அனைவருக்கும் 5000 ரூபாய் கொடுத்துச் சந்தோஷப்படுத்துகிறோம். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தாய்வீட்டு சீதனம் என்று சந்தோஷப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் பாரதிராஜா இந்த மாதிரி தவறைச் சத்தியமாகச் செய்யவில்லை. ஏனென்றால் அவர் மனவிட்டு என்னிடம் பேசியிருக்கிறார். ஒரு 4 பேர் சேர்ந்து கொண்டு பாரதிராஜாவை சூழ்நிலை கைதி மாதிரி ஆக்கிவிட்டார்கள். உண்மையில் தனிப்பட்ட முறையில் மனவேதனையில் தான் இருந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். பல பேர் பல விதமாக என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அவரிடம் பேசும் போது, அனைவரிடமும் கலந்து பேசி பண்ணுகிறேன் என்று சொல்லித் தான் அறிக்கை விடுத்தார். அடுத்த 2 நாட்களில் ஒரு கும்பல் அவரை சந்தித்துப் பேசி கையெழுத்து வாங்கி அறிக்கைக் கொடுத்துவிட்டது. இந்தவொரு பதட்டத்தில் தான் இருக்கிறோம்.

இந்தச் சங்கத்தில் தலைவராக இருக்கும் போது நல்லபடியாக நிர்வாகம் செய்துவிட்டு தான் வந்தேன். வரும் தலைமுறையினருக்கு வழிவிட்டுத் தான் சென்றேன். இப்பவும் சொல்றேன், இந்தச் சங்கத்தில் இந்தாண்டும் நான் தலைவராக நிற்கப் போகிறேன் என அறிவிக்கவில்லை. ஆனால், பாரதிராஜா வந்தார் என்றால் அவருடைய பதவிக்கு மட்டும் தேர்தல் வேண்டாம். மற்ற பொறுப்புகளுக்குத் தேர்தல் வைத்துக் கொள்வோம் என்று தான் சொன்னேன்.
பாரதிராஜா என்னென்ன நல்லது செய்ய வேண்டுமோ இந்தச் சங்கத்துக்குச் செய்யட்டும். இதில் எந்தவொரு குறைபாடுமே கிடையாது. அவருடைய காலம் பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கடந்த 9 மாதங்களில் அவர் இல்லாமல் தயாரிப்பாளர் சங்கத்தில் என்னென்ன குழப்பம் எல்லாம் நடந்தது என்பது இங்குள்ள பைல்களை எடுத்துப் பார்த்தால் தெரியும். அப்படிப்பட்டவர்கள் இப்போது பாரதிராஜாவுடன் சேர்ந்திருக்கிறார்கள்.

தமிழுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறோமோ, அந்தளவுக்குத் திரையுலகில் பாரதிராஜாவுக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர்கள். எந்தக் காலத்திலும் அவரை கீழே இறக்கிப் பார்க்கவே மாட்டோம். உங்கள் காலில் விழுந்து மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். யோசனை செய்யுங்கள். தயவு செய்து பிளவும் வேண்டாம்.

இந்தப் பிரச்சினையில் பாரதிராஜாவின் பெயரையே பயன்படுத்த வேண்டாம். அவர் ஒரு புனிதம். இந்த திரையுலகிற்கு ஒரு செழுமையான சூழலை உண்டாக்கிக் கொடுத்த ஒரு மகான். அனைவருக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில், இந்த தயாரிப்பாளர் சங்கத்தை உடைக்க வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறோம்”

இவ்வாறு தயாரிப்பாளர் தாணு பேசினார்.

தாணு மட்டுமன்றி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் தயாரிப்பாளர் சங்கத்தை உடைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts