கொரோனாவுக்கும் மத்தியில் சுமுகமாக நடைபெற்ற தேர்தல்

வடக்கு மாகாணத்தில் சுமுகமான தேர்தல் இடம்பெற்றிருந்ததாகவும், மக்கள் அமைதியான முறையில் வாக்களிப்பில் பங்குபெற்றியிருந்ததாகவும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

வடக்கில் ஐந்து மாவட்டங்களில் இரண்டு தேர்தல் மாவட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றன. இதில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி சேர்த்து யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டமாகவும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு சேர்ந்து வன்னித் தேர்தல் மாவட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் மக்கள் இம் முறை கொவிட்-19 சுகாதார நடமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதேநேரம் வாக்களிப்பு நிலையங்களில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு கடமையில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைதியான முறையில் மக்கள் வாக்களிப்பில் பங்குபெற்றியிருந்ததாக மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதிஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 71.52 வீதமான வாக்குப் பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு 92 ஆயிரத்து 264 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 65,984 பேர் வாக்களித்திருந்தனர். 26,280 பேர் வாக்களிக்கவில்லை.

அதேநேரம் மாவட்டத்தில் எதுவிதமான வன்முறைகளோ, அசம்பாவிதங்களோ இடம்பெற்றிருக்கவில்லை. அமைதியான முறையில் சுமுகமான தேர்தல் நடைபெற்றிருந்தது என்றார்.

மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் சுமுகமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மோகன்றாஸ் தெரிவித்தார். இதன்படி 79.49 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மேலும் மாவட்டத்தில் 62 ஆயிரத்து 675 பேர் வாக்களிக்கதுள்ளனர்.

நேற்றைய தினம் 30 சிறிய சிறிய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. எனினும் அவை உடனடியாகவே தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அதுதவிர மக்கள் அமைதியாகவும், சுமுகமாகவும் வாக்களித்திருந்தனர் என்றார்.

வவுனியா மாவட்டம்

வவுனியாவிலும் அமைதியான முறையில் தேர்தல் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றிருந்ததாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார். இதன்படி வவுனியா மாவட்டத்தில் 76.48 வீதம் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது. அதேநேரம் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 77 வீதம் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது என்றார்.

முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 76.25 வீதம் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்தார். அதேநேரம் இங்கு 78 ஆயிரத்து 360 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 57 ஆயிரத்து 125 பேர் வாக்களித்திருந்தனர். அத்துடன் எதுவித அசம்பாவிதங்களும் இன்றித் இத் தேர்தல் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்டம்

யாழ்ப்பாண மாவட்த்தில் 67.72 வீதமான வாக்குப் பதிவுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மகேசண் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது. கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இத் தேர்தல் வெற்றியளித்துள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காணப்பட்ட போதும் மக்கள் நேரத்துடன் சென்று வாக்களிப்பில் ஈடுப்பட்டிருந்தனர். மக்கள் மத்தியில் இவ் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்களும் முதன்மையாக செயற்பட்டுள்ளன.

வன்முறைகளோ, அசம்பாவிதங்களோ எதுவும் இம் முறை இடம்பெறவில்லை. சுமுகமான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. எனவே ஊடகங்கள், அரச அதிகாரிகள், பொலிசார் ஆகிய சகலதரப்பினருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

—-

Related posts