தளபதி 65′ படக்குழுவில் என்ன நடக்கிறது?

‘தளபதி 65’ படத்தின் இறுதிக் கதையை, இன்னும் சில நாட்களில் விஜய்யைச் சந்தித்துச் சொல்லவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் ‘மாஸ்டர்’ வெளியாகவுள்ளது. பல ஓடிடி தளங்கள் நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்குக் கேட்டபோதும், தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது.
‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இது விஜய் நடிப்பில் உருவாகும் 65-வது படம் என்பதால் ‘தளபதி 65’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி முடிவாகிவிட்டாலும், இன்னும் அறிவிக்கப்படாமலேயே இருக்கிறது.
‘மாஸ்டர்’ வெளியானவுடன் இதனை அறிவிக்க படக்குழு திட்டமிட்டது. ஆனால், ‘மாஸ்டர்’ வெளியாகவில்லை என்பதால் இதன் அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கூட்டணியில் என்ன பணிகள் என்று படக்குழு தரப்பில் விசாரித்தோம்.
” ‘தர்பார்’ படத்தின் தோல்வியால், கண்டிப்பாக ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தக் கரோனா ஊரடங்கினால் இன்னும் தனது கதையை மெருகேற்றி இருக்கிறார். அதுபோல் கதையின் அவுட்லைனாக விஜய்யிடம் சொல்லிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஆனால், கதையின் முழுமையான திரைக்கதை வடிவத்தை இன்னும் விஜய்க்குத் தெரிவிக்கவில்லை. அந்த இறுதிக்கட்ட கதை விவாதம் சில நாட்களில் நடைபெறவுள்ளது. அப்போதுதான் விஜய்யிடம் முழுமையான திரைக்கதையுடன் கூடிய கதையை ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிக்க உள்ளார். இடையே விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் நடைபெறவில்லை.
கதை முடிவாகி, பட்ஜெட் இறுதி செய்தவுடன்தான் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெறும். விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் சந்திப்பு முடிந்தவுடன் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது”.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related posts