கரோனா வைரஸ் ‘காற்றில் பரவும்நோய்’

கரோனோ வைரஸின் கண்ணுக்குத் தெரியாத நுண்துகள்கள் காற்றில் பரவி மனிதர்களுக்குப் பாதிப்பை விளைவிக்கக்கூடும். காற்றிலும் கரோனா வைரஸ் பரவும் என்பதால் உலக சுகாதார அமைப்பு தனது முந்தைய பரிந்துரைகளைத் திருத்தி அறிவிக்க வேண்டும் என்று உலக அளவில் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளனர்.

மனிதர்கள் மூலம் மனிதர்களுக்குக் கரோனா வைரஸ் பரவும். ஒருமனிதர் தும்மும்போதும், இருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பரவும். பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தேய்க்கும்போது கரோனா பரவும் என உலக சுகாதார அமைப்பு முன்பு அறிவுறுத்தியது.

அதை மாற்றி, காற்றில் கரோனா வைரஸ் பரவும் என்று அறிவிக்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு தெரிவித்துள்ளது.

காற்றில் மூலம் கரோனா வைரஸ் பரவும் என்பது குறித்த ஆய்வுக் கட்டுரையை 32 நாடுகளைச் சேர்ந்த 239 அறிவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள் அடுத்த வாரம் வெளியிட உள்ளனர். அதற்கு முன்பாக உலக சுகாதார அமைப்புக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும், ஆய்வறிக்கையைக் குறிப்பிட்டும் பரிந்துரையை மாற்றக் கோரியுள்ளனர்.

ஆனால், இதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் உலக சுகாதார அமைப்பு இதுவரை வெளியிடவில்லை.
ஒருவர் தும்மியபின், இருமியபின் அவரின் எச்சலின் சிறிய நுண்துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை மற்றொருவர் அந்த நுண் கரோனா வைரஸை உள்ளே சுவாசித்தால் அவரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு குறிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மருத்துவர் பெனிடெட்டா அலிகிரான்ஸி, ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், “ கரோனா வைரஸ் நோய் காற்றில் பரவுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பதைக் கடந்த இரு மாதங்களாகக் கணித்து வருகிறோம். ஆனால், அதற்கான உறுதியான, நிலையான ஆதாரங்கள் இல்லாமல் அதை வெளியிடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts