இனவாதிகளின் கையாட்களாக மாறிய ஐக்கிய மக்கள் சக்தி?

ஐக்கிய மக்கள் சக்தி இனவாதிகளின் கையாட்களாக மாறியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, 2019 ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக ´இலங்கையின் முன்னோக்கிய பயணத்திற்கு எல்லை இல்லை. ஒன்றாய் நாம் அதை நிரூபிப்போம்´ எனும் தலைப்பில் சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்தின் 15-16 ஆம் பக்கங்களில் ´மக்களுக்கான அரசியலமைப்பு´ தொடர்பான அத்தியாயத்தில், பின்வரும் முன்மொழிவுகள் உள்ளடங்கியிருந்தன.

❖ ஒற்றையாட்சி எண்ணக் கருவைக் கைவிட்டு ´பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத நாடு´ என இலங்கையை அழைத்தல்.
❖ மத்திய அரசாங்கத்திடம் காணப்படும் அதிகாரங்களை அதிகபட்ச அளவில் மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளித்தல்.
❖ மாகாண சபைப் பிரதிதிநிதிகளைக் கொண்ட இரண்டாவது சபை – செனட் சபையொன்றை – உருவாக்கி மத்திய சட்டமன்றத்தின் (பாராளுமன்றத்தின்) அதிகாரத்தை மேலும் வரையறுத்தல்.
❖ பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை ரத்துச் செய்து மாகாண சபைகளுக்கு சுயாதீனமாக நிதிகளைத் திரட்டுவதற்கு வாய்ப்பளித்தல்.
❖ தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகளை மாகாண சபைகளின் கீழ் கொண்டு வருதல்.
❖ மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசாங்கத்துக்கிடையில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்குத் தனியான அரசியலமைப்பு நீதிமன்றமொன்றை உருவாக்குதல்.

2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் முன்வைத்த புதிய அரசியலமைப்பு வரைவுக்கும், சஜித் பிரேமதாசவின் கொள்கைப் பிரகடனத்திலுள்ள இந்த முன்மொழிவுகளுக்குமிடையில் எந்த வேறுபாடும் இல்லை. இந்த நாட்டைப் பிளவுபடுத்திப் பிரிக்க வேண்டுமாயின் சர்வதேசத்திற்குத் தெரிகின்ற முறையில் ஒற்றையாட்சி அல்லது ´யுனிடரி ஸ்டேட்´ எனப்படும் விசேட தொழிநுட்ப அர்த்தமுடைய அந்த ஆங்கில வார்த்தையினை எமது அரசியலமைப்பிலிருந்து அகற்றியே தீர வேண்டும்.

இவ்வாறு நாட்டின் பிரதான அரசியல் கட்சியொன்று வெளிப்படையிலேயே பிரிவினைவாதக் கோட்பாடுகளைத் தனது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்குவது மிகவும் பாரதூரமானதொரு விடயமாகும். இந்த ஆவணத்தை அவர்கள் பாரியளவில் பிரசித்தப்படுத்தியதுடன், அதன் உள்ளடக்கம் தொடர்பாக எவ்விதமான தெளிவினையும் வழங்காது, சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள், அநுநாயக்க தேரர்களுக்கும் அதனை வழங்கி வைத்தனர். ஏதோ ஒரு வகையில் அவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பின், அந்தப் பிரிவினைவாதக் கொள்கைக்கு பொதுமக்களின் ஆணையும், மகா சங்கத்தினரின் ஆசிர்வாதமும் கிடைத்துள்ளது எனக் கூறி, அவர்கள் அதனை அமுல்படுத்தியிருப்பார்கள்.

2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல்களில் ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்றி, நாட்டின் பெரும்பான்மை மக்களை அடக்கியொடுக்கி, நாட்டைப் பிளவுபடுத்திப் பிரிப்பதற்காக ஒன்றிணைந்த அனைவரும் ஒரே அரசியல் குட்டையில் ஊறிய மட்டைகளே. முதலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருந்த இந்தக் குழுவினர் இன்று ´ரணிலுக்கு சிங்கள வாக்குகளைப் பெற முடியாது. சஜித்துக்கே முடியும்´ எனக் கூறி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர். இந்த கொடுக்கல் வாங்கலில் தமது பங்கினை நிறைவேற்றுவதற்காக முடிந்தளவு வாக்குகளைப் பெறும் நோக்கில், ஐக்கிய மக்கள் சக்தி ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருபதாயிரம் ரூபாய் கொடுப்பனவொன்றை வழங்கும் என்பதைப் போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசுவதை நாம் காண்கிறோம். பல்வேறுபட்ட அம்சங்களை இலவசமாக வழங்குவதாக கூறியே ஜனாதிபதித் தேர்தலையும் வெற்றிகொள்ள முயற்சித்தனர்.

ஏதாவது இனம் அல்லது சமயத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறும் அரசியல் கட்சிகள் தமது இனத்திற்கு அல்லது சமயத்திற்கு உரிய மக்களை மாத்திரம் கவனத்திற் கொண்டு ஏனைய இன, சமயங்களுக்குரியவர்களை வெளியாட்களாக அல்லது எதிரிகளாக கருதுவதையே செய்து வருகின்றன. இந்த அரசியல் காரணமாக ஏற்பட முடியுமான பயங்கர பிரதிபலன்களை நாம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மூலம் கண்டுகொண்டோம்.

ஏதாவது அரசியல் கட்சியொன்று ஒரு இனத்திற்கு அல்லது சமயத்திற்குரிய மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொள்வதன் மூலம் அவர்களும் ஒரு வகையில் அரசியல் கைதிகளாக மாறுகின்றனர். சஹ்ரான் ஹசீம் எனும் தீவிரவாதி மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னைப் பின்பற்றும் சிறு குழுவொன்றை உருவாக்கிய பின்பு, அந்த வாக்குகளைப் பெற்றுக்கொள்ள அப்பிரதேசத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் போட்டியொன்று ஏற்பட்டது. இதன் மூலம் அத்தீவிரவாதிக்கு அப்போது ஏற்புடைய மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து அவர்களுக்கு நிபந்தனைகளை விதிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவ்வாறு தீவிரவாதி இனவாத அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்துவதுடன், இனவாத அரசியல் கட்சிகள் நாட்டில் ஆட்சி புரிகின்ற தேசிய அரசியல் கட்சியைக் கட்டுப்படுத்தும். இறுதியாக நோக்கும்போது தீவிரவாதிகளே அரசாங்கத்தை மறைமுகமாகக் கட்டுப்படுத்தியிருந்தனர். இந்த அரசியலில் சிக்கியிருந்தமையினாலேய நல்லாட்சி அரசாங்கத்தினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலைக் தடுக்க முடியாமல் போனது.

1948 இன் பின்பு ஜீ.ஜீ. பொன்னம்பலம் சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தில் அமைச்சராக இருந்ததுடன், அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இல்லாத போதிலும், சேனாநாயக்கவினரின் நெருக்கமான அரசியல் பங்காளியாக இருந்தார். 1975 ஆம் ஆண்டு வரை அல்பிரட் துரையப்பா அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய ஆதரவாளராக விளங்கினார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஏ.சி.எஸ். ஹமீத், எம்.எச். முஹம்மத், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதியுதீன் மஹ்மூத், அலவி மௌலானா போன்ற தலைவர்கள் அன்று இருந்தனர். அவர்கள் அனைவரும் தமிழ் அல்லது முஸ்லிம் சமூகத்தைப பிரதிநிதித்துவப் படுத்தியதுடன், ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியினுடைய அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினுடைய மிகவும் முக்கிய அங்கத்தவர்களாக காணப்பட்டனர். பெரும்பான்மை மக்களை அடக்கியொடுக்கி, தமது குவியலை மாத்திரம் அதிகரித்துக்கொள்ள முயற்சிக்கின்ற, இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் கொண்ட, கப்பம் கோரும் அரசியல் அன்று காணப்படவில்லை. இது வரை காலமும் அதனுடன் தொடர்புடையவர்களுக்குப் பாரிய அனுகூலங்கள் கிடைத்தமையினாலேயே இந்த நச்சுத்தன்மையான அரசியல் கலாசாரம் இன்று நாம் காண்கின்ற முறையில் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த அரசியலை 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் தோற்கடித்தனர். இந்த நாட்டில் இனங்கள் மற்றும் சமயங்கள் மத்தியில் இதற்கு முன்பிருந்தது போன்ற ஒற்றுமை, அந்நியோன்ய ஒத்துழைப்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டுமாயின் குறுகிய இனவாத அரசியல் மூலம் அனுகூலங்கள் கிடைக்காத நிலைமையொன்று ஏற்பட வேண்டும். அப்போது தான் இந்த நாட்டில் இளம் சந்ததியினரின் மத்தியிலிருந்து மீண்டும் பொன்னம்பலம்கள், துரையப்பாக்கள், ஹமீட்கள், மௌலானாக்கள் தோற்றம் பெறுவார்கள். குறுகிய இனவாதத்திற்கும், கப்பம் கோரும் அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின் ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய மக்கள் ஆணையை விடவும் பலமான மக்கள் ஆணையை இந்த பாராளுமன்றத் தேர்தலில் எமக்கு வழங்குமாறு நான் அனைத்து வாக்காளர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts