புலம்பெயர் மக்களது முதலீடுகளுக்கு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்குவோம்

வடக்கிலே அபிவிருத்தி நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதன் பொருட்டு புலம்பெயர் நாடுகளிலிருந்தும் முதலீட்டாளர்கள் இங்கு வருவார்களேயானால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் சலுகைகளும் வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறினார். அங்கிருந்து வரும் முதலீட்டாளர்கள் வடக்கு பகுதிக்குச் செல்லாது கொழும்பிலேயே தங்கி விடுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த 5 வருட காலத்தைப் பின்னோக்கிப் பார்த்தால் வடக்கில் எந்தவொரு அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை. தெற்கிலும் அதே நிலைமை தான் என்று கூறிய பிரதமர், இதற்குக் காரணம் முன்னைய அரசும் அவர்களுடன் சேர்ந்து இயங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தான் என்றும் குற்றம் சாட்டினார்.

நாட்டு அபிவிருத்தி மற்றும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களின் போது வடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் இல்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.நேற்றுக் காலை அலரி மாளிகையில் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த பிரதமர், அக் கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 1977ஆம் ஆண்டின் பின்னர், 2005 – 2010ஆம் ஆண்டுகளில் தங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பல மேற்கொள்ளப்பட்டன. அந்த மாகாணங்களில் மக்களின் வாழ்க்கையை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் திட்டங்களுடன் அரசாங்கம் செயற்பட்டதாகவும் கூறினார்.

அத்துடன், வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts