அதிகம் உழைத்த கதாபாத்திரம்: அக்‌ஷய் குமார்

‘லக்‌ஷ்மி பாம்’ திரைப்படத்தின் கதாபாத்திரம் தான் தனக்கு மன ரீதியாக அதிகம் உழைத்த கதாபாத்திரம் என்று நடிகர் அக்‌ஷய் குமார் கூறியுள்ளார்.
2011-ம் ஆண்டு, தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்திருந்த படம் ‘காஞ்சனா’. தற்போது ‘லக்‌ஷ்மி பாம்’ என்கிற பெயரில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நாயகன் நாயகியாக நடிக்க, லாரன்ஸ் இயக்கத்தில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
கரோனா நெருக்கடியால் தற்போது இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியிடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இதை அறிவிக்கும் நிகழ்வில் பேசிய அக்‌ஷய் குமார், “இந்த 30 வருடங்களில் இதுதான் மன ரீதியாக நான் அதிகம் உழைத்த கதாபாத்திரம். இதற்கு முன் இதை நான் அனுபவித்ததில்லை.
இதற்கான பெயர் லாரன்ஸ் அவர்களையே சேரும். என் சுயத்தின் ஒரு புதிய வடிவத்துக்கு அவர் என்னை அறிமுகம் செய்துவைத்தார். அப்படி ஒரு பக்கம் என்னுள் இருக்கிறது என்பதே எனக்கு இதுவரை தெரியாது. எனது மற்ற கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது.
எந்த சமூகத்தையும் புண்படுத்தாமல் நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று உறுதி செய்ய வேண்டியிருந்தது. 150 திரைப்படங்கள் நடித்திருந்தாலும் கூட, ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு மிகுந்த ஆர்வத்துடன் சென்றேன். எனது எல்லையை விரிவுபடுத்தி, என்னைப் பற்றி நிறைய கற்றுக் கொண்டேன்.
பாலின சமத்துவம் குறித்து இன்னும் அதிகமான புரிதலை இந்தப் படம் எனக்குக் கொடுத்தது. நீங்கள் விரும்பியபடி இருக்கலாம். ஆனால் அறியாமையில் இருக்காதீர்கள். அமைதிக்கு முக்கியம் கனிவு. இந்தப் படத்தில் நடிக்கும் போது அதிக டேக் வாங்கியது போல் வேறெந்த படத்திலும் வாங்கியதில்லை” என்று அக்‌ஷய்குமார் பேசியுள்ளார்.

Related posts