சுஷாந்த் சிங் மரணம்: கங்கணாவைச் சாடுகிறாரா

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக கங்கணா தெரிவித்துள்ள கருத்துகளை மறைமுகமாகச் சாடியுள்ளார் சோனாக்‌ஷி சின்ஹா.
ஞாயிற்றுக்கிழமை காலை நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது தேசிய அளவில் அவரைத் தெரிந்த அனைத்துத் தரப்பிலும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது. சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக கங்கணா பாலிவுட் நடிகர்களையும், இயக்குநர்களையும் கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,”சுஷாந்த் சிங் படங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததில்லை. ‘கேதர்நாத்’, ‘சிச்சோரே’, ‘எம்.எஸ்.தோனி: தி அண்ட்லோட் ஸ்டோரி’ ஆகிய படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை. ‘கல்லி பாய்’ போன்ற படங்களுக்கு அனைத்து விருதுகளும் கிடைத்துள்ளன. பாலிவுட் அவரை அங்கீகரிக்கவில்லை” என்று கடுமையாகச் சாடி கங்கணா பேசியுள்ளார்.
இந்த வீடியோ வைரலாகப் பரவியது. இந்தச் சமயத்தில் சோனாக்‌ஷி சின்ஹா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பன்றிகளுடன் சண்டை போடுவதில் என்ன பிரச்சினை என்றால், பன்றிகளுக்கு அது சந்தோஷமாக இருக்கும். ஆனால், நம் மீது அழுக்காகும். நமது துறையின் உறுப்பினர் ஒருவர் காலமாகியிருக்கும்போது சிலர் அவர்கள் பிரச்சினைகளைக் குறிப்பிட்டுச் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். தயவுசெய்து அதை நிறுத்துங்கள். நீங்கள் உமிழும் எதிர்மறைக் கருத்தும், வெறுப்பும், நச்சும் இப்போது தேவையில்லாதது. மறைந்தவருக்குக் கொஞ்சம் மரியாதை கொடுங்கள்”.
இவ்வாறு சோனாக்‌ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.
கங்கணா ரணாவத்தின் கருத்துக்குத்தான் சோனாக்‌ஷி சின்ஹா மறைமுகமாக தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Related posts